கார்களை விற்க போராடும் டாடா மோட்டார்ஸ்! ஒரே வருடத்தில் எல்லாமே தலைக்கீழா மாறிடுச்சு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவை சேர்ந்த முன்னணி உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதமும் அசால்ட்டாக கிட்டத்தட்ட 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. ஆனால் என்ன... டாடாவை காட்டிலும் பிரம்மாண்டமான சில நிறுவனங்களும் இந்திய கார் மார்க்கெட்டில் உள்ளன. அவைதான், மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகும். நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாத விற்பனையில் இந்த வரிசையில் மஹிந்திரா (Mahindra)-வும் இணைந்துள்ளது.
அதாவது, கடந்த பிப்ரவரி மாத கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸை மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் மட்டுமின்றி, மஹிந்திராவும் முந்தியுள்ளது. இதனால், டாடா மோட்டார்ஸ் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கடந்த 2 மாதங்களாக டாடா கார்களின் விற்பனை கொஞ்சம் சுமாராகவே இருந்து வருகிறது.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் சொந்தமாக்கி இருந்தது. கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸில் இருந்து மொத்தம் 46 ஆயிரத்து 437 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 51 ஆயிரத்து 270 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது டாடா கார்கள் விற்பனை ஆனது 4,833 யூனிட்கள் குறைந்துள்ளது. கடந்த 2025 ஜனவரி மாதத்தில் கூட 48 ஆயிரத்து 75 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், ஜனவரியை காட்டிலும் பிப்ரவரியில் 1,638 டாடா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்பட்ட டாடா காராக முதலிடத்தை நெக்ஸான் (Nexon) பிடித்துள்ளது.

வழக்கமாக கடந்த சில வருடங்களாகவே, அதிகம் விற்பனையாகும் டாடா காராக முதலிடத்தை பஞ்ச் (Punch) பிடிப்பது வழக்கம். கடந்த 2024ஆம் ஆண்டில் சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான நம்பர் ஒன் காராக கூட டாடா பஞ்ச் முன்னிலை வகித்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் டாடா கார்களுக்குள்ளேயே 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முதலிடத்தை பிடித்துள்ள டாடா நெக்ஸான் கடந்த மாதத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 349 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாடா காரை வாங்க விரும்பும் 3இல் ஒருவர் நிச்சயமாக நெக்ஸான் காரை தேர்வு செய்வதாக இந்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2024 பிப்ரவரியில் 14 ஆயிரத்து 395 நெக்ஸான் கார்களையும், கடந்த 2025 ஜனவரியில் 15 ஆயிரத்து 397 நெக்ஸான் கார்களையும் டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

நெக்ஸானுக்கு அடுத்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள பஞ்ச் கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 ஆயிரத்து 559 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே, 2024 பிப்ரவரியில் சுமார் 18 ஆயிரத்து 438 பஞ்ச் கார்களும், 2025 ஜனவரியில் 16 ஆயிரத்து 231 பஞ்ச் கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது இடத்தில், டாடா டியாகோ உள்ளது. கடந்த மாதத்தில் 6 ஆயிரத்து 954 டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது வழக்கமாக விற்பனையாகக்கூடிய டியாகோ கார்களின் எண்ணிக்கையே ஆகும். 4வது இடத்தில் லேட்டஸ்ட் டாடா காரான கர்வ் 3,483 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் முறையே அல்ட்ராஸ் மற்றும் சஃபாரி கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த 2025 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,604 மற்றும் 1,562 ஆகும். இவை இல்லாமல், 1,550 டிகோர் கார்களையும், 1,376 ஹெரியர் கார்களையும் கடந்த பிப்ரவரியில் டாடா விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் காரை தவிர்த்து, கிட்டத்தட்ட மற்ற அனைத்து டாடா கார்களின் விற்பனையும் வழக்கத்தை காட்டிலும் கவனிக்கத்தக்க அளவில் குறைந்துக் கொண்டே வருகிறது. மேற்கூறப்பட்டுள்ள டாடா கார்களின் விற்பனை எண்ணிக்கைகளில் அவற்றின் எலக்ட்ரிக் வெர்சன்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை குறைவானது மொத்த டாடா கார்களின் விற்பனை குறைவுக்கு முக்கியமான காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications









