இந்த கார் மறுபடியும் வரப்போகுதா! மாருதி, டாடாவுக்கு எல்லாம் இப்பவே உள்ளுக்குள்ள உதறல் எடுத்துருக்கும்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). முன்பு இந்த காரில் குரோ எடிசன் (Kuro Edition) என்ற ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும் நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் தற்போது விற்பனையில் இல்லை.
ஆனால் நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் மாடல் கூடிய விரைவில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக மேக்னைட் காரின் குரோ எடிசன் மாடலின் டீசர் புகைப்படத்தை (Teaser Image) நிஸான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. நிஸான் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த டீசர் புகைப்படத்தை தற்போது நம்மால் காண முடிகிறது.

நிஸான் கார் நிறுவனமானது, ஜப்பானை சேர்ந்தது ஆகும். ஜப்பானிய மொழில் குரோ என்றால், கருப்பு என்று அர்த்தம். எனவே விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் கருப்பு நிறத்தால் மெருகேற்றப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் மாடலில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். அதிகபட்சமாக 71 பிஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் மாடலில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இதன் பவர் அவுட்புட் 99 பிஹெச்பி பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறன் ஆக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் மாடல் ஏராளமான வசதிகளையும் (Features) கொண்டிருக்கும்.
இதில், 360 டிகிரி கேமரா, உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை, எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தை உயிர்ப்புடன் வைத்துள்ள கார் என்றால், அது மேக்னைட்தான். அதன் குரோ எடிசன் மாடலின் வருகை, இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
அனேகமாக நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே நிஸான் மேக்னைட் குரோ எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நிஸான் மேக்னைட் காரின் போட்டி மாடல்களான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களுக்கு எல்லாம், குரோ எடிசன் மாடலின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








