ஒரு கார் கூட விற்காமல் ஸ்டாக்குலே கிடக்குது! இந்த காரை வாங்க ஆளே இல்லை! ஏன் தெரியுமா?
நிஸான் நிறுவனத்தின் எக்ஸ்-டிரையல் காரின் விற்பனை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் விற்பனை செய்ய முயற்சித்தும் அந்நிறுவனத்தால் ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் முழுசைஸ் எஸ்யூவி காராக எக்ஸ்-டிரையல் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் இந்திய மார்கெட்டில் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன்மாத விற்பனை குறித்த விபரங்களை நிஸான் நிறுவனம் வெளியிடும் போது அதில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த ஜூன் மாதம் 30 நாளும் முயற்சித்தும் ஒருவர் கூட இந்த காரை வாங்கவில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நிஸான் எக்ஸ்-டிரையல் காருக்கு ஒரு கார் கூட விற்பனையாகாமல் கழிவது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கூட ஒருவர் கூட இந்த காரை வாங்கவில்லை.ஆனால் கடந்த மார்ச் மாதம் 15 பேர் இந்த காரை வாங்கியிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 76 பேர் இந்த காரை வாங்கியிருந்தனர். மே மாதம் கூட 20 பேர் இந்த காரை வாங்கிய நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் ஒருவர் கூட வாங்காமல் 0 விற்பனை என்ற நிலைக்கு திரும்பியது. இதன் மூலம் இந்த கார் இந்திய வாடிக்கையார்கள் அதிகம் விரும்பும் வகையில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

நிஸான் நிறுவனம் தற்போது குறைவான மாடல்களையே இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இதனால் அந்நிறுவனத்தின் பெயரை மக்கள் பெரிய அளவில் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. இது விற்பனை குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணம். பலருக்கு இப்படி ஒரு கார் இருப்பதே தெரியாது.
பிரிமியம் செக்மெண்ட் எஸ்யூவி காராகஇந்த கார் விற்பனையாகி வரும் நிலையில் இதற்கு போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குலோஸ்டர், ஸ்கோடா கோடியாக், ஹூண்டாய் டுஸான் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது. இந்த கார்களை எல்லாம் தாண்டி எக்ஸ்-டிரையல் காரை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் மிக குறைவாக தான் இருப்பார்கள்.

இது போக இந்த விற்பனை மந்தத்திற்கு மற்றொரு முக்கியமான காரணம் இதன் விலை தான். இந்த கார் ரூ49.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த விலையில் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கிறது. இதனால் இதன் விற்பனையும் வெகு குறைவாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எக்ஸ் டிரையல் கார் விற்பனை சரிவுக்கு இந்த காரின் விலை ஒரு காரணமாக இருந்தாலும் சமூகத்தில் இந்த காருக்கு ஃபார்ச்சூனர் அளவிற்கு பெயர் இல்லாததும் மற்றொரு காரணமாக இருக்கிறது. இந்நிறுவனம் விலையை குறைத்து காரை அப்டேட் செய்தால் ஒரளவிற்கு விற்பனை சரியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









