பணக்காரர்கள் இப்பவே புக்கிங்கை போட ஆரம்பித்து இருப்பாங்க! பின்ன... போர்ஷேவில் எலெக்ட்ரிக் கார் ஆச்சே!!
உலகளவில் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ள போர்ஷே கேயென் (Porsche Cayenne) எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் டர்போ எலெக்ட்ரிக் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.76 கோடி மற்றும் ரூ.2.26 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் என்ஜின் உடனான போர்ஷே கேயென் கார் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கேயென் எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேயென் எலெக்ட்ரிக் காரின் தோற்றம் பெட்ரோல் பதிப்பை ஒத்திருந்தாலும், இதன் ஒட்டுமொத்த நீளம் சற்று அதிகம் ஆகும்.

மேலும், காரின் நீளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதற்கு ஏற்ப காரின் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 130மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கேயென் எலெக்ட்ரிக் காரின் முகப்பில் மூடிய கிரில் இடம்பெற்று இருப்பதுடன், மெல்லிய எல்இடி ஹெட்லைட்களும் உள்ளன. பின்புறத்தில், மெல்லிய எல்இடி டெயில்லைட்கள் ஒரு எல்இடி லைட் பார் மூலம் இணைக்கப்பட்டு, நடுவில் ஒளிரும் போர்ஷே எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
நவீன டிசைன் இதற்கு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. புதிய கேயென் எலெக்ட்ரிக் காரின் உட்புறத்தில், மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வளைந்த 14.5-இன்ச் சென்ட்ரல் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே மற்றும் டிரைவருக்கான 14.9-இன்ச் பயணிகள் டிஸ்பிளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அக்மென்டட் ரியாலிட்டி (AR) என்கிற காட்சிகளை பெரியதாக காட்டக்கூடிய வசதியுடன் கூடிய ஹெட்-அப் டிஸ்ப்ளே, 8-விதங்களில் மின்சாரம் மூலம் அட்ஜெஸ் செய்யக்கூடிய முன் இருக்கைகள், 4-இணைப்பு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 20 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இந்த காரில் உள்ளன.
புதிய கேயென் எலெக்ட்ரிக் காரின் இரண்டு வேரியண்ட்களிலும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் காரின் பின் சக்கரங்களுடன் இணைக்கப்பட்ட ஸ்டீயரிங் சக்கர வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் 402 பிஎச்பி பவரையும், 835 என்.எம் டார்க்கையும் வெளியிடுகிறது. இது 0-100 கிமீ/மணி வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டும் என போர்ஷே தெரிவித்துள்ளது.

இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கிமீ ஆகும். இரண்டு வேரியண்ட்களில், டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட் சுமார் 1140 பிஎச்பி பவரையும், 1150 என்.எம் டார்க் திறனிலும் இயங்கக்கூடியதாக உள்ளது. இது வெறும் 2.5 வினாடிகளில் 100 கிமீ/மணி வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் 260 கிமீ/மணி ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு வேரியண்ட்களிலும் இரட்டை மின் மோட்டார்கள் மற்றும் 113 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 623 கிமீ தூரம் வரை செல்லும். டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட் 642 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போர்ஷே கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த அளவிற்கு, அதிவேகமாக இயங்கக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த போர்ஷே காரில் தொடர்சியாக புது, புது எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள புதிய கேயென் எலெக்ட்ரிக் கார் இந்திய பணக்காரர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









