இந்த விலையில் கார் வாங்கறவங்களுக்கு இனி அதிக ஜிஎஸ்டி! வரியை உயர்த்த திட்டம்! யாருக்கெல்லாம் பாதிப்பு தெரியுமா?
இந்தியாவிற்கு எதிரான வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அரசின் முடிவு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்த முடிவு, இந்தியாவிற்கு மட்டுமல்லாது, அமெரிக்காவிற்கும் சேர்த்தே பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்தியாவுடன் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என அமெரிக்காவிலேயே, அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல்கள் எழ தொடங்கியுள்ளன. இது ஒரு புறம் இருக்க, அமெரிக்கா தொடங்கி இருக்கும் வர்த்தக போரால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய அரசு எடுக்க தொடங்கியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பது அமெரிக்க அரசின் விருப்பம். ஆனால் இதற்கு வளைந்து கொடுக்க போவதில்லை என இந்தியாவின் மத்திய அரசு உறுதியாக தெரிவித்து விட்டது. எனவே வர்த்தக போர் தீவிரமானால், இந்தியாவின் பொருளாதாரத்தை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு வீச்சில் எடுக்க தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மக்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதற்காக, பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி (GST) வரிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாகனங்களும் அடங்கும். இந்தியாவில் தற்போதைய நிலையில் சிறிய ரக கார்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதை 18 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பின்னர், சிறிய கார்களின் விற்பனை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் கார்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த 40 சதவீத வரி என்பது மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் கார்களுக்கு மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே இது இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களை எந்த வகையிலும் பாதிக்காது. மறுபக்கம் இந்தியாவில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி குறைவாக விதிக்கப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தங்கள் அமலுக்கு வந்த பின்பும், எலெக்ட்ரிக் கார்கள் மீதான வரி தொடர்ந்து 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி வரும் புதிய தகவல்கள் வேறு விதமாக உள்ளன. அதாவது 20 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரையிலான எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிஸ்னஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் 20 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரையிலான எலெக்ட்ரிக் கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தகவல், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும்பட்சத்தில், அவர்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்க அதிக செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
ஆனால் 20 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி தொடர்ந்து 5 சதவீதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த முடிவும், நடுத்த வர்க்க மக்களை பாதிப்பதற்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லை. ஏனெனில் நடுத்தர வர்க்க மக்கள் 40 லட்ச ரூபாய் விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக தற்போது மக்கள் மத்தியில் ஏராளமான யூகங்கள் எழுந்துள்ளன. ஜிஎஸ்டி வரி குறையவுள்ள காரணத்தால், புதிய கார்களை முன்பதிவு செய்யும் முடிவை நிறைய பேர் தற்போது தற்காலிகமாக ஒத்தி வைத்து வருகின்றனர். ஜிஎஸ்டி வரி குறைந்த பின்பு முடிவு செய்து கொள்ளலாம் என்பதுதான் இதற்கு காரணம்.
ஜிஎஸ்டி வரியை குறைப்பதன் மூலம், இந்திய மக்களின் சுமையை மத்திய அரசு ஓரளவிற்கு குறைக்க உள்ளது. எனவே இது மகிழ்ச்சியளிக்க கூடிய ஒரு விஷயம்தான். இருப்பினும் கார்கள் உள்பட எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி? என்பதை முடிந்த வரை விரைவாக அறிவித்தால் நன்றாக இருக்கும். புதிய ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்துவதில் நிர்வாக ரீதியில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இருப்பினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சற்று விரைவாக வெளியிடுவதன் மூலம், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறான ஒரு சூழலில், ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) கூட்டம், வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








