ஜப்பான், சீனா என்று பிரதமர் மோடி ஓடி ஓடி உழைப்பது இதுக்கு தானா? சுஸுகியை டார்க்கெட் செய்துதான் சுற்றுப்பயணமே!!
ஜப்பானை சேர்ந்த பிரபலமான சுஸுகி (Suzuki) நிறுவனம் ஒருவழியாக எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) இந்தியாவில் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளது. ஜப்பான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய கடந்த சில வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியை சமீபத்தில்தான் சுஸுகி துவங்கியது. மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் காராக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இ-விட்டாரா (e-VITARA) காரின் உற்பத்தியை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் மாருதி சுஸுகி தொழிற்சாலைக்கு சென்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மேலும், குஜராத்தில் புதியதாக மாருதி சுஸுகி நிறுவியுள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி (Battery) உற்பத்தி தொழிற்சாலையையும் பிரதமர் நேரில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வுகளில் சுஸுகி நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். சில அதிகாரிகள் இதற்காகவே ஜப்பானில் இருந்து இந்தியா வந்து இருந்தனர்.

அப்போது, இந்தியாவில் அடுத்த 5- 6 வருடங்களில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்ய உள்ளதாக சுஸுகி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுகளில் கலந்துக் கொண்ட சில நாட்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு புறப்பட்டார். அதாவது, சுஸுகியின் தாயக நாடான ஜப்பானுக்கு புறப்பட்டார்.
இதனாலேயே இந்த சுற்றுப்பயணத்தில் சுஸுகி நிறுவனம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, சில தகவல்கள் தற்போது நமக்கு கிடைக்க பெற்றுள்ளன. இந்தியா- ஜப்பான் இடையேயான இந்த சந்திப்பில், இரு நாட்டு அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை புரிந்துணர்வின்படி இரு நாடுகளிலும் அதிகரிக்க வேண்டும் என கலந்துரையாடப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக, அடுத்த 10 வருடங்களில் ஜப்பானில் இருந்து சுமார் 68 பில்லியன் டாலர்கள் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய்) பல்வேறு வழிகளில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இவ்வளவு பெரிய தொகை ஜப்பானிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் இந்தியாவில் பல விஷயங்களில் செலவிடப்பட உள்ளது.
அந்த பல விஷயங்களுள் முக்கியமானவை, போக்குவரத்து துறை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான தொழிற்நுட்பங்கள் ஆகும். மேலும், இதற்கான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெறுவதில் உள்ள இடையூறுகளை சரிச்செய்து சப்ளை செயினை சீராக வைத்திருக்கவும் ஜப்பானின் முதலீடுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், இவற்றில் சுஸுகி நிறுவனத்தின் தலையீடும், பங்களிப்பும் அதிகமாக இருக்கும்.

ஏனெனில், இந்தியா-ஜப்பான் இடையேயான இந்த சமீபத்திய பேச்சுவார்த்தையில், மொபிலிட்டி (Mobility) மற்றும் க்ரீன் டெக்னாலஜியை பற்றி தான் அதிகமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதால், இவை சுஸுகி நிறுவனத்திற்கு பெரிதும் அனுகூலமாக இருக்கும். இதை மனதில் வைத்தே அடுத்த 5- 6 வருடங்களில் 70 ஆயிரம் கோடி வரையில் இந்தியாவில் முதலீடு செய்ய போவதாக சுஸுகி தெரிவித்துள்ளதாக பார்க்கிறோம்.
மேலும், இந்தியாவை உலகின் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான மையமாக மாற்றுவதில் சுஸுகி நிறுவனத்தின் பங்களிப்பு இதன் மூலம் அதிகமாகலாம். இதனை குறிப்பிட்டே பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவின் 'மேட்-இன்-இந்தியா' முயற்சிக்கான தூதராக மாருதி சுஸுகி நிறுவனம் வரும் காலங்களில் இருக்கும் என வெளிப்படையாக புகழாரம் சூட்டி இருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் அதன் இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதனால், பிரதமர் கூறியதுபோல் மேட்-இன்-இந்தியா தயாரிப்புகளை உலக நாடுகளுக்கு கொண்டுப்போய் சேர்ப்பதில் சுஸுகியின் பங்களிப்பு வரும் காலங்களில் முக்கியமானதாக இருக்கும். இதற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பிரதமரின் ஜப்பான் சுற்றுப்பயணம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பல வழிகளில் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









