10 வருட பழைய கார் என்று சொன்னால் சத்தியமா நம்ப முடியல! ஷோரூமில் இருந்து சுட சுட கொண்டுவரப்பட்டது போல இருக்கு
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களிலேயே சஃபாரி (Safari) விலையுயர்ந்ததாக விளங்குகிறது. டாடா சஃபாரி காருக்கு இந்திய கார்கள் மார்க்கெட்டில் நீண்ட வருட வரலாறு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், டாடா மோட்டார்ஸில் இருந்து துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார்களுள் சஃபாரியும் ஒன்றாகும். தற்போது விற்பனையில் இருப்பது, 2ஆம் தலைமுறை சஃபாரி கார் ஆகும். 1998ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை சஃபாரி 2020 வரையில் விற்பனையில் இருந்தது.
இந்த 22 வருடங்களில் பல்வேறு விதமான வடிவங்களில், பல்வேறு விதமான பெயர்களில், பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் சஃபாரி கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறு, 2015ஆம் ஆண்டில் இருந்து 2017 வரையில் விற்பனையில் இருந்த கார் தான், சஃபாரி டிகோர் (Dicor) ஆகும்.

டிகோர் என்பது காரில் பொருத்தப்பட்ட டீசல் என்ஜினின் பெயர் ஆகும். மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களால் இணைந்து உருவாக்கப்பட்ட 3.0 லிட்டர் 4-சிலிண்டர் டிகோர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 116 பிஎஸ் மற்றும் 300 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இந்த டிகோர் டீசல் என்ஜினும் அதன்பின்பும் பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த வகையில் 2015இல் அறிமுகம் செய்யப்பட்ட சஃபாரி டிகோர் காரில் 2.2 லிட்டர் 16-வால்வு DOHC VTT டிகோர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. வெறும் 2 வருடங்கள் மட்டுமே விற்பனையில் இருந்த போதிலும், இந்த 2 வருடங்களில் பல கஸ்டமர்கள் டாடா சஃபாரி டிகோர் காரை வாங்கினர்.

அவ்வாறு, சஃபாரி டிகோர் காரை பயன்படுத்திவரும் கஸ்டமர்களுள் ஒருவர் அதனை ஷோரூமில் இருந்து புதியதாக வாங்கியபோது எப்படியிருந்ததோ அந்த கண்டிஷனுக்கு மாற்றியுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மேற்கொள்ளப்பட்ட இந்த கஸ்டமைசேஷன் (Customisation) பணிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, இந்த சஃபாரி டிகோர் காருக்கு முழுவதுமாக வெள்ளை நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டுவருவதற்கு முன் இந்த சஃபாரி டிகோர் கார் துருப்பிடித்து முற்றிலுமாக அலங்கோலமான நிலையில் இருந்துள்ளது. காரை சுற்றிலும் நிறைய இடங்களில் டொக்குகள் விழுந்திருந்தன. இன்னும் சொல்லப்போனால், காருக்கு புதியதாக பம்பரை வாங்கி பொருத்தி உள்ளனர். அதேபோல், முன்பக்க கிரில் பகுதியையும் மாற்றியுள்ளனர்.

இந்த சஃபாரி டிகோர் காரின் உரிமையாளர் காரை பற்றி கேட்டுக் கொண்டே, பனிகாலத்தில் பெயிண்ட் உலர்வதற்கு நேரம் எடுப்பது பிரச்சனையாக உள்ளதா என மெக்கானிக் ஷாப் உரிமையாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஆம், முந்தைய காலங்களில் அவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், ஆனால் தற்போதெல்லாம் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கு தீர்வுகளை கண்டுப்பிடித்துவிட்டன எனவும் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மொத்த மாடிஃபிகேஷன் வேலைகளுக்கும் ரூ.1.3 லட்சம் வரையில் செலவானதாக தெரிவித்துள்ளனர். 2015இல் வாங்கியிருப்பினும், இந்த குறிப்பிட்ட டாடா சஃபாரி டிகோர் கார் 10 வருடங்கள் மட்டுமே பழமையானது ஆகும். ஆனால், அதற்குள்ளாக துருப்பிடிக்க வைத்து அலங்கோலமாக மாற்றி உள்ளனர். இருப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது தவறை உணர்ந்து ரூ.1.3 லட்சம் வரையில் செலவு செய்து இந்த காரை அருமையானதாக மாற்றியுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









