காரை டெலிவரி எடுத்த கையோட இந்த ஸ்டிக்கரை கிழிச்சு வீசிருங்க! டீலர்ஷிப்ல கூட இந்த விஷயத்தை சொல்ல மாட்டாங்க!
புதிய கார்களை வாங்கும் பலர், சீட்களில் இருக்க கூடிய பிளாஸ்டிக் கவரை கிழிப்பது இல்லை. அதை கிழித்து விட்டால், புதிய கார் என்ற உணர்வு போய் விடும் என பலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, இருக்கைகள் அழுக்காகி விடும் என பயப்படுகின்றனர். புதிய கார் என்பதால், ஒரு சில மாதங்களாவது கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது பலரின் எண்ணம்.
சீட்களில் இருக்க கூடிய பிளாஸ்டிக் கவரை போல், காரின் பின் பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் பார்கோடு ஸ்டிக்கரையும் கூட, பலரும் கிழிப்பதில்லை. இந்த சிறிய தவறை யார் செய்கிறார்களோ, அவர்கள் தங்கள் காரை கொள்ளையர்களிடம் இழக்க நேரிடலாம். அதிர்ச்சியாக இருக்கிறதா? அது ஏன் என்பதை இந்த செய்தியில் நாங்கள் விளக்குகிறோம்.

பொதுவாக கார்களின் பின் பக்க கண்ணாடியில் பார்கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதில், காரின் விஐஎன் நம்பர் (VIN - Vehicle Identification Number), மாடல், வேரியண்ட், இன்ஜின் வெர்ஷன், எரிபொருள் வகை மற்றும் கலர் உள்பட, காரை பற்றிய பல்வேறு தகவல்கள் இருக்கும். இதை வைத்து, கொள்ளையர்களால் காரையே திருடி செல்ல முடியும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில், கார் கொள்ளை கும்பல் ஒன்று பிடிபட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தன. அதாவது அந்த கொள்ளை கும்பல், கார்களின் பின் பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் பார்கோடு ஸ்டிக்கரை புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

பின்னர் அந்த புகைப்படத்தை துபாயில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுனருக்கு அவர்கள் அனுப்பி வைப்பார்களாம். இந்த புகைப்படத்தை ஆராயும் தொழில்நுட்ப வல்லுனர், காரின் பாதுகாப்பு அமைப்பை 'அன்லாக்' செய்யும் பணியில் ஈடுபடுவாராம். அதாவது அந்த பார்கோடு ஸ்டிக்கரில் இருக்கும் கோட்கள் மற்றும் எண்கள் மூலமாக, புதிய கோட் (Code) ஒன்றை, அவர் உருவாக்கி விடுவார்.
பின்னர் அந்த கோடை, டெல்லியில் உள்ள கும்பலுக்கு அவர் அனுப்பி வைத்து விடுவாராம். இதன்பின் சம்பந்தப்பட்ட காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழையும் கொள்ளை கும்பல், அதிநவீன டிவைஸ்களை பயன்படுத்தி, தொழில்நுட்ப வல்லுனர் வழங்கிய கோடை 'ரன்' செய்வார்களாம். இதன் மூலம் கார் 'ஸ்டார்ட்' ஆகி விடுமாம்.
ஒருவேளை சம்பந்தப்பட்ட கார் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை கொண்டிருந்தாலும் கூட, அதன் உரிமையாளருக்கு எந்தவிதமான எச்சரிக்கையும் செல்லாது. அதற்கு ஏற்ற வகையில், காரின் பாதுகாப்பு அமைப்பில் கொள்ளை கும்பல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். அத்துடன் 'ஜாமர்கள்' மூலமாக காரின் ஜிபிஎஸ் அமைப்பையும், அவர்கள் 'பிளாக்' செய்து விடுவார்களாம்.
ஒருவேளை அந்த கார் இன்ஜின் இம்பொலைசர் வசதியை கொண்டிருந்தாலும் கூட, அது வேலை செய்யாது. ஏனெனில் காரின் உண்மையான உரிமையாளர் உண்மையான சாவியை கொண்டு காரை ஸ்டார்ட் செய்ததாக அது நினைத்து கொள்ளும். எனவே புதிய காரை வாங்கியதும், பார்கோடு ஸ்டிக்கரை கிழித்து வீசி விடுவது நல்லது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் சரக்குகளை எளிதாக கண்காணிக்கவும், கையாளவும் இந்த பார்கோடு ஸ்டிக்கர்கள் உதவி செய்கின்றன. இருப்பினும் இதில் ஆபத்துக்கள் இருப்பதால், டெலிவரியின்போது இந்த ஸ்டிக்கரை கிழித்து விட வேண்டும் என்ற எச்சரிக்கையையும், பல கார் நிறுவனங்கள் வழங்குகின்றன. ஆனால் ஒரு சிலர் அதை பொருட்படுத்துவதில்லை. இதில் நீங்களும் ஒருவர் என்றால், இனி கவனமாக இருப்பது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இனிமேல் புதிய காரை வாங்கியதும் கோயிலுக்கு போகிறீர்களோ இல்லையோ, முதலில் பார்கோடு ஸ்டிக்கரை கிழித்து வீசி விடுங்கள். இந்த சிறிய செயல், உங்களின் பல வருட உழைப்பில் வாங்கப்பட்ட காரை பாதுகாக்க உதவி செய்யும். அத்துடன் உங்களுக்கு வீண் மன உளைச்சல் ஏற்படுவதையும் தடுக்கும்.


Click it and Unblock the Notifications








