இந்த கம்பெனி இப்படி ஒரு காரியத்தை செய்யும்னு கனவுல கூட நெனக்கல! வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கீட்டாங்க
இந்தியாவில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி வருகின்றன. கார்களின் விலை உயரவிருப்பது பற்றிதான் நாங்க இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்திய சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தற்போது தொடர்ந்து விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை வெளியிட்டு கொண்டுள்ளன. சொல்லப்போனால் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களிடம் இருந்தும் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), மஹிந்திரா (Mahindra), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கியா (Kia), ஹோண்டா (Honda) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) என ஏராளமான கார் நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது மற்றொரு முன்னணி நிறுவனமும் இணைந்துள்ளது.

அது ரெனால்ட் (Renault) ஆகும். இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் கார்களின் விலை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வானது, கார் மாடல்கள் மற்றும் அதன் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடும். இருப்பினும் அதிகபட்சமாக 2 சதவீதம் வரை விலை உயர்த்தப்படும் என ரெனால்ட் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. ஒரு சில முன்னணி கார் நிறுவனங்கள் நடப்பு 2025ம் ஆண்டில் மட்டுமே 2வது முறையாகவோ அல்லது 3வது முறையாகவோ கார்களின் விலைகளை உயர்த்துகின்றன. ஆனால் ரெனால்ட் நிறுவனம் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போதுதான் கார்களின் விலையை உயர்த்தவுள்ளது.

சரியாக சொல்வதென்றால், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு, தற்போதுதான் ரெனால்ட் நிறுவனம் முதல் முறையாக கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய சந்தையில் ரெனால்ட் கார்களின் விலை சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஏப்ரல் மாதம்தான் உயரவுள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்து கொண்டே வருவதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது என இதற்கு ரெனால்ட் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மொத்தம் 3 கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை ரெனால்ட் க்விட் (Renault Kwid), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) ஆகியவை ஆகும். இதில், ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Renault Triber Facelift) மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தற்போது தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நிறுவனங்களும் கார்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. எனினும் ரெனால்ட் நிறுவனம் விலையை உயர்த்தாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெனால்ட் நிறுவனத்திடம் இருந்தும் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ரெனால்ட் நிறுவனம் கார்களின் விலையை உயர்த்தவில்லை என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு ரெனால்ட் கார்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








