தீபாவளி நேரத்தில் 4 ஆயிரம் பேர் இந்த கார் ஷோரூமுக்கு போய் இருக்காங்க! கஸ்டமர்ஸ் இன்னும் அதிகம் ஆகுவாங்களா?
ரெனால்ட் இந்தியா (Renault India) நிறுவனம், பிரெஞ்சு வாகனத் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் குழுமத்தின் முழு உரிமையின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது வெளிவந்துள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரத்து 672 ரெனால்ட் கார்கள் மொத்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 3,861 ரெனால்ட் கார்களைக் காட்டிலும் 21% சிறப்பான ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி ஆகும். இந்த விற்பனை அதிகரிப்புக்கு புதிய டிரைபர் (Triber) மற்றும் கைகர் (Kiger) கார்களின் வெற்றிகரமான அறிமுகம் முக்கியக் காரணமாகும். அத்துடன், ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) சீர்திருத்தங்களின் நேர்மறையான தாக்கமும் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

இந்த காரணத்தினால்தான், கடந்த மாதத்தில் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையின் வாகனங்கள் விற்பனை 17.3% வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விற்பனை இதனை காட்டிலும் அதிகமாக 21% ஆக பதிவாகி உள்ளது. இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் கடந்த 2025 செப்டம்பரில் 4 ஆயிரத்து 265 கார்களை விற்றிருந்தது.
அதனுடன் ஒப்பிடுகையிலும், அக்டோபர் மாத விற்பனை 9.54% ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். பண்டிகைக் காலச் சலுகைகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள ரெனால்ட் டீலர்ஷிப்களில் வாடிக்கையாளர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. வஹான் (VAHAN) வெளியிட்டுள்ள விபரங்களின்படி, கடந்த மாதத்தில் 5,041 ரெனால்ட் கார்கள் சில்லறை விற்பனையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களுக்குக் கிடைத்த வாடிக்கையாளர் ஆதரவு, 2025 அக்டோபரில் 5,041 சில்லறை விற்பனை யூனிட்களாக மாறியுள்ளது. வஹான் தரவுகளின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.7% வளர்ச்சியைக் காட்டுகிறது. நிறுவனத்தின் வலுவான விற்பனை வளர்ச்சி குறித்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் பிரான்சிஸ்கோ ஹிடால்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரைபர் மற்றும் கைகர் கார் மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த பெரும் வரவேற்பு அக்டோபர் மாத விற்பனையில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. புதிய கார்கள் நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சந்தைகளில் வலுவான ஆர்வத்தை ஈர்த்துள்ளன. இது பண்டிகைக் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கையையும், அதிகரித்த தேவையையும் பிரதிபலிக்கிறது. இந்த ஊக்கமளிக்கும் வளர்ச்சி வரும் மாதங்களிலும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்".

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. சரியான நேரம் பார்த்து மேம்படுத்தப்பட்ட புதிய டிரைபர் மற்றும் கைகர் கார்களை அறிமுகப்படுத்தியதால், கடந்த அக்டோபர் மாதத்தில் ரெனால்ட் கடந்த ஆண்டை விட 21% வளர்ச்சியை கண்டுள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் புதிய டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின், ஆகஸ்ட்டில் கைகர் ஃபேஸ்லிஃப்ட் காரும், செப்டம்பரில் ரெனால்ட் க்விட் (Kwid) காரின் புதிய 10ஆம் ஆண்டுவிழா எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றை தொடர்ந்து, வருகிற 2026 ஜனவரி மாதத்தில் முற்றிலும் புதிய அடுத்த-தலைமுறை டஸ்டர் (Duster) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications









