மாருதி கார்களுக்கு வேட்டு ரெடி.. ரெனால்ட் காரிலும் சிஎன்ஜி வந்தாச்சு.. அரசு அங்கீகரித்த கிட்டோட விலை இவ்ளோதானா
இந்தியாவில் சிஎன்ஜி கார் (CNG Car)-கள் விற்பனையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் முன்னணியில் உள்ளது. இரண்டாவது இடத்திலேயே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது. இவர்கள் மட்டும் அல்ல சிஎன்ஜி கார்கள் பிரிவில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் சிறந்த போட்டியாளனாக விளங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய சிஎன்ஜி கார் விற்பனையாளராக ரெனால்ட் (Renault) நிறுவனமும் மாற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய முக்கிய தயாரிப்புகள் சிலவற்றிற்கான சிஎன்ஜி கிட்டை அது அறிமுகம் செய்திருக்கின்றது.
க்விட் (Kwid), கைகர் (Kiger) மற்றும் ட்ரைபர் (Triber) ஆகிய கார் மாடல்களுக்கான சிஎன்ஜி கிட்-டையே ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. அதவாது, வழக்கமான பெட்ரோலில் இயங்கும் கார்களை சிஎன்ஜி வாகனமாக மாற்றக் கூடிய கிட்டையே ரெனால்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஜை கிட்டையே நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. ஆகையால், இந்த சிஎன்ஜி கிட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்காது என தெரிகின்றது. மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் இவர்கள் ஃபேக்டரியிலேயே சிஎன்ஜி கிட்டை ஃபிட் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆனால், ரெனால்ட் இந்த கிட்டை ரெட்ரோ-ஃபிட் (Retrofitment) வகையிலேயே வழங்க இருக்கின்றது. இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டே இந்த பணிகளை ரெனால்ட் நிறுவனம் தொடங்கி உள்ளது. மேலும், நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களுக்கு சிஎன்ஜி கிட்-டை அறிமுகம் செய்திருப்பதால், வரும் நாட்களில் அவற்றின் விற்பனை கூடுதல் வளர்ச்சியைக் காணும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமல்ல பெட்ரோல், டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி வாகனங்கள் குறைவான மாசை வெளியேற்றும் என்பதால் இவற்றின் பயன்பாடு காற்று மாசைக் குறைப்பதிலும் லேசாக பங்களிக்கும் என கருதப்படுகின்றது. இதன் பக்கம் வாடிக்கையாளர்களை வேண்டும் என்பதற்காக சற்றே குறைவான விலையை தன்னுடைய சிஎன்ஜி கிட்டிற்கு ரெனால்ட் நிர்ணயம் செய்திருக்கின்றது.
ரூ. 75 ஆயிரம் க்விட் கார் மாடலுக்கான சிஎன்ஜி கிட்டிற்கும், ரூ. 79 ஆயிரத்து 500 கைகர் மற்றும் டிரைபர் ஆகிய கார் மாடல்களுக்கான சிஎன்ஜி கிட்டிற்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. காரின் விலை அல்லாமல் இதை தனியாக செலுத்த வேண்டும்.
அனைத்து தர ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்ட கிட் இது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், பிரச்னை இருக்காது என கூறப்படுகின்றது. மேலும், இதற்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியை நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே ரெனால்ட் நிறுவனத்தின் சிஎன்ஜி கிட்டை வாங்கிக் கொள்ள முடியும்.
மஹாராஷ்டிரா, உபி, டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலேயே ரெனால்ட் சிஎன்ஜி இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. அடுத்தடுத்த கட்டமாக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தன்னுடைய சிஎன்ஜி கிட்டை விற்பனைக்கு வழங்க ரெனால்ட் திட்டமிட்டு உள்ளது. ஆகையால், விரைவில் தமிழகம் போன்ற தென்னிந்தியாவின் பிற மாநிலங்களும் இந்த லிஸ்ட்டில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இதன் விற்பனை வளர்ச்சி காணும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ரெனால்ட் நிறுவனம் தன்னுடைய கார்களுக்கான சிஎன்ஜி கிட்டை அறிமுகம் செய்துள்ளது. இதன் வருகை மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் சிஎன்ஜி கார்களுக்கு வேட்டு வைக்கம் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








