டாடா நானோ போல் குறைவான விலை! இந்தியாவே எதிர்பாத்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! போட்டி நிறுவனங்கள் கதை முடிஞ்சுது
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் இவி (Renault Kwid EV). இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இதன் காரணமாகவே இந்த எலெக்ட்ரிக் காரை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இந்த ஆவலை அதிகரிக்கும் விதமாக, ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம், இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, பிரேசில் நாட்டில் ரெனால்ட் நிறுவனம் தற்போது க்விட் இவி எலெக்ட்ரிக் காரை அறிமுகமே செய்து விட்டது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ரெனால்ட் க்விட் இ-டெக் (Renault Kwid E-Tech) என்ற பெயரில், பிரேசிலில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், லெவல் 1 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள், பின் பகுதியில் கேமரா, ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஸ்டியரிங் வீல் போன்ற வசதிகளும், ரெனால்ட் க்விட் இ-டெக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், ரெனால்ட் க்விட் இ-டெக் காரில், 26.8 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) வழங்கப்பட்டுள்ளது. 30 kW DC சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 40 நிமிடங்களில், 15 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் கார் 4.1 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த எலெக்ட்ரிக் கார் 14.6 வினாடிகளில் எட்டி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் க்விட் இ-டெக் எலெக்ட்ரிக் காரின் விலை 99,990 பிரேசிலியன் ரியல் (Brazilian Real - BRL) என கார்வாலே தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது இந்திய மதிப்பில் சுமார் 16 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் இந்தியாவில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் விலை இவ்வளவு இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் இந்தியாவில் விலை குறைவாக இருக்கும் என்பதால், அதற்கு ஏற்ப வசதிகளும் குறைக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களும், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் வருகையால், விற்பனையில் நெருக்கடிகளை சந்திக்கலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








