வெறும் 6 லட்சத்துக்கு புது எலெக்ட்ரிக் காரா! மார்க்கெட்டை தலை கீழா புரட்டி போட போகும் முன்னணி நிறுவனம்!
இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளதாக 91 வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியின்படி பார்த்தால், ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் முன் பகுதியில், எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படலாம். அத்துடன் 'Y' என்ற எழுத்தை தலைகீழாக வைத்தால் எப்படி இருக்குமோ, அந்த வடிவிலான எல்இடி பகல் நேர விளக்குகள், பாடி கிளாடிங் மற்றும் பிளாஸ்டிக் வீல் கேப்கள் ஆகிய அம்சங்களும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரில், சார்ஜிங் போர்ட் முன் பகுதியில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன் பகுதியில் ரெனால்ட் லோகோவிற்கு கீழே சார்ஜிங் போர்ட் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் வழக்கமான ஆன்டெனா, பின் பகுதியில் டீஃபாகர்கள் போன்ற அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமானவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 26.8 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 225 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மறுபக்கம் இந்த காரின் பேட்டரியை 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் நிரப்புவதற்கு 45 நிமிடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வ விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
இருப்பினும் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக ரெனால்ட் க்விட் இவி இருக்க போகிறது என்பது உறுதி. ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும், மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. எனவே ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் தற்போது ரெனால்ட் க்விட் ஐசி இன்ஜின் காரின் விற்பனையும் மந்தமாக உள்ளது. எனவே அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகை, க்விட் பிராண்டை உயிர்ப்புடன் வைத்திருக்க செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








