இந்த காரோட விலை எவ்ளோனு தெரிஞ்சா பைக் வாங்கற எண்ணத்தை இப்பவே குழி தோண்டி பொதச்சிருவீங்க!
இந்திய சந்தையில் ஒரு சில கார்களை, பிரீமியம் பைக்குகளின் விலையிலேயே வாங்கி விட முடியும். அப்படிப்பட்ட கார்களில் ஒன்றுதான் ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்றாகும்.
ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ள ரெனால்ட் க்விட் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.

இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், ரெனால்ட் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வெறும் 235 க்விட் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 634 ரெனால்ட் க்விட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 399 ரெனால்ட் க்விட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 62.93 சதவீத வீழ்ச்சி ஆகும். ரெனால்ட் க்விட் காரின் இந்த வீழ்ச்சிக்கு 3 முக்கியமான காரணங்கள் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் தற்போது மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களை வாடிக்கையாளர்கள் பெரிதாக வாங்குவதில்லை. அதற்கு மாறாக பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களைதான் வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குகின்றனர்.
இது ரெனால்ட் க்விட் காரின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பது எங்கள் கருத்து. இரண்டாவதாக கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து, ஜிஎஸ்டி (GST) வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய கார்களை வாங்கும் முடிவை ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி போட்டிருக்கலாம்.
இது ரெனால்ட் க்விட் காரின் வீழ்ச்சிக்கு 2வது காரணமாக இருக்கலாம். இதற்கு அடுத்தபடியாக ரெனால்ட் க்விட் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் விரைவில் விற்பனைக்கு வரவிருப்பதும், தற்போதைய மாடலின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். அதாவது ரெனால்ட் நிறுவனம் தங்களுடைய கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்களை, தற்போது தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.
2025 ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Triber Facelift) மற்றும் 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Kiger Facelift) ஆகிய புதிய மாடல்கள், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் 2025 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Kwid Facelift) மாடலும் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
புதிய மாடல் வருகிறது என்றாலே, தற்போது விற்பனையில் உள்ள மாடலை வாங்குவதை பலரும் விரும்ப மாட்டார்கள். ரெனால்ட் க்விட் காரின் வீழ்ச்சிக்கு இது 3வது காரணமாக இருக்கலாம். எனவே புதிய மாடலின் வருகைக்கு பின்னர் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை வெறும் 4.30 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 5.99 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் முன்பு ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை 4.70 லட்ச ரூபாயாக இருந்தது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட் 6.45 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் தற்போது ரெனால்ட் க்விட் காரின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விலை குறைந்துள்ள காரணத்தாலும், புதிய மாடல் அறிமுகம் செய்யப்படவுள்ள காரணத்தாலும், எதிர்காலத்தில் ரெனால்ட் க்விட் காரின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-presso) மற்றும் டாடா டியாகோ (Tata Tiago) போன்ற கார்களுக்கு எல்லாம், ரெனால்ட் க்விட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications








