ஜிஎஸ்டியை குறைத்தும் பெருசா பலன் இல்ல... பல வருடங்களாக போராடும் இந்த கார் கம்பெனிகளை பற்றி தெரியுமா?
2025 அக்டோபர் மாத கார்கள் விற்பனைப் பட்டியலில், ரெனால்ட் (Renault) நிறுவனம் பத்தாவது இடத்தையும், நிசான் (Nissan) நிறுவனம் 12வது இடத்தையும் பிடித்துள்ளன. நிசான் நிறுவனத்தின் மேக்னைட் (Magnite) காரின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் (Triber) கார் மூலம் வளர்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் ரெனால்டின் சந்தைப் பங்கு வழக்கம்போல் 1.1% ஆக தொடர்ந்துள்ளது. அதேநேரம், நிசான் நிறுவனத்தின் சந்தைப் பங்கு முந்தைய ஆண்டின் 0.8%-லிருந்து 0.6% ஆகக் குறைந்துள்ளது. தற்போது ரெனால்ட் நிறுவனம் டிரைபர், கைகர் (Kiger) மற்றும் க்விட் (Kwid) ஆகிய கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஆனால், நிசான் நிறுவனம் மேக்னைட் காரை மட்டுமே நம்பி உள்ளது. இந்த நிலை 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் புதிய நிசான் டெக்டான் (Tekton) கார் அறிமுகத்துடன் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் நிறுவனமும் அடுத்த தலைமுறை டஸ்டரை 2026 ஜனவரி 26 அன்று அறிமுகப்படுத்த உள்ளது.
2025 அக்டோபர் மாதத்தில் ரெனால்ட் 4,672 கார்களை விற்று, 2024 அக்டோபரில் விற்ற 3,870 கார்களை விட 21% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், 2025 செப்டம்பரில் ரெனால்ட் விற்ற 4,265 கார்களை விட அக்டோபரில் மாதந்திர விற்பனை 10% அதிகரித்துள்ளது. ரெனால்ட் விற்பனையில் டிரைபர் கார் 3,170 யூனிட்கள் விற்பனை உடன் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

| Renault (Oct-25 vs Oct-24) | Oct-25 | Oct-24 | Diff | Growth % YoY | Share % Oct 25 | |
|---|---|---|---|---|---|---|
| 1 | Triber | 3,170 | 2,111 | 1,059 | 50.17 | 67.85 |
| 2 | Kiger | 948 | 1,053 | -105 | -9.97 | 20.29 |
| 3 | Kwid | 554 | 706 | -152 | -21.53 | 11.86 |
| - | Total | 4,672 | 3,870 | 802 | 20.72 | 100.00 |
| Renault (Oct-25 vs Sep-25) | Oct-25 | Sep-25 | Diff | Growth % MoM | Share % Sep 25 | |
|---|---|---|---|---|---|---|
| 1 | Triber | 3,170 | 2,587 | 583 | 22.54 | 60.66 |
| 2 | Kiger | 948 | 1,166 | -218 | -18.70 | 27.34 |
| 3 | Kwid | 554 | 512 | 42 | 8.20 | 12.00 |
| - | Total | 4,672 | 4,265 | 407 | 9.54 | 100.00 |
இது முந்தைய ஆண்டு அக்டோபரை விட 50% மற்றும் கடந்த செப்டம்பரை விட விற்பனையில் 23% வளர்ச்சி ஆகும். கைகர் 948 யூனிட்களுடன் 2024 அக்டோபரை விட 10% சரிவையும், 2025 செப்டம்பரை விட 19% சரிவையும் சந்தித்துள்ளது. இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள க்விட் 554 யூனிட்கள் விற்பனை உடன் 2024 அக்டோபரை காட்டிலும் 22% சரிவை சந்தித்து இருந்தாலும், 2025 செப்டம்பரை காட்டிலும் விற்பனை 8% அதிகரித்துள்ளது.
நிசானை பொறுத்தவரையில், இந்த நிறுவனத்தின் விற்பனை மொத்தமும் மேக்னைட் கார் மூலம் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 திருத்தம் மற்றும் பண்டிகை கால தேவை மேக்னைட் விற்பனைக்கு பெரிதும் உதவியுள்ளது. கடந்த செப்டம்பரில் 1,652 யூனிட்களாக இருந்த மேக்னைட் விற்பனை அக்டோபரில் 2,615 யூனிட்களாக 58% அதிகரித்துள்ளது.
| Nissan (Oct-25 vs Oct-24) | Oct-25 | Oct-24 | Diff | Growth % YoY | Share % Oct 25 | |
|---|---|---|---|---|---|---|
| 1 | Magnite | 2,615 | 3,119 | -504 | -16.16 | 100.00 |
| 2 | X-Trail | 0 | 2 | -2 | -100.00 | 0.00 |
| - | Total | 2,615 | 3,121 | -506 | -16.21 | 100.00 |
| Nissan (Oct-25 vs Sep-25) | Oct-25 | Sep-25 | Diff | Growth % MoM | Share % Sep 25 | |
|---|---|---|---|---|---|---|
| 1 | Magnite | 2,615 | 1,652 | 963 | 58.29 | 100.00 |
| 2 | X-Trail | 0 | 0 | 0 | - | 0.00 |
| - | Total | 2,615 | 1,652 | 963 | 58.29 | 100.00 |

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நிசான் நிறுவனம் மேக்னைட் குரோ (KURO) எடிசனை அறிமுகப்படுத்தியது. இது பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவி கார் வாங்குபவர்களை ஈர்க்கும் வகையில், அனைத்து அம்சங்களும் கொண்ட முற்றிலும் கருப்பு நிற மாடலாகும். டெக்டான் மிட்சைஸ் எஸ்யூவி கார், பி-எம்பிவி (B-MPV) பிரிவில் புதிய 7-சீட்டர் கார் மற்றும் சி-எஸ்யூவி (C-SUV) பிரிவில் புதிய 7-சீட்டர் கார் போன்ற புதிய கார் மாடல்களுடன் நிசான் நிறுவனம் 2026 மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கு வலுவான தயாரிப்பு வரிசையைத் தயார் செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் இரண்டும் கூட்டணி போட்டு செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த இரு வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இந்திய சந்தையில் தங்களுக்கான ஒரு இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகின்றன. இது கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி 2.0 மற்றும் பண்டிகை கால தேவையால் சற்று மாறியுள்ளது என்றாலும், இந்த நிலை வரும் மாதங்களுக்கும் தொடருமா என்பது கேள்விக்குறியே.
புதிய கார் அறிமுகங்களினால், 2026ஆம் ஆண்டு ரெனால்ட் மற்றும் நிசான் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இந்தியாவில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், புதிய கார்கள் உடன் இந்திய சந்தையில் புதிய இன்னிங்ஸில் நுழைய தயாராகி வருகின்றன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் அடுத்த தலைமுறை டஸ்டருடன் ரெனால்ட் தனது புதிய இன்னிங்ஸை தொடங்க உள்ளது.


Click it and Unblock the Notifications









