ஒரேயொரு கஸ்டமர்... இந்த காரை வாங்கிய அந்த ஒருத்தரை பார்க்கனும் போல இருக்கு! நம்மால் காரை தான் வாங்க முடியல
ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), உலகின் எவரொருவரும் வாங்க துடிக்கும் கார்களை உருவாக்கும் பழமையான அல்ட்ரா-லக்சரி கார் நிறுவனம். பெரும் செல்வந்தர்கள் கூட வாங்க விரும்பும் காராக ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விளங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால், பெரும் செல்வந்தர்களால் மட்டுமே ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாங்க முடிகிறது. ஏனெனில் அவற்றின் விலைகள் அந்த அளவிற்கு பல கோடி ரூபாய்களில் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இதனாலேயே, இந்தியாவில் வருடத்திற்கு 50 - 60 கார்கள் விற்பனையாகினாலே ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் மகிழ்ச்சி அடைந்துவிடும். இத்தகைய ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் கார் (Electric Car) ஒன்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
அதுதான், ஸ்பெக்டர் இவி (Spectre EV) ஆகும். இந்தியாவில் நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் சமீபத்தில்தான் வெளியாகி இருந்தன. அதில், ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரேயொரு எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் ஒரேயொரு ரோல்ஸ்-ராய்ஸ் எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது என்றாலும், இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரியில் 4 எலக்ட்ரிக் கார்களை ரோல்ஸ்-ராய்ஸ் விற்பனை செய்திருந்தது. கடந்த 2024ஆம் ஆண்டில், உலகளவில் மொத்தம் 5 ஆயிரத்து 712 கார்களை ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.
இந்த 5,712 ஆனது ஒரு ஆண்டில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கைகளில் 3வது அதிகப்பட்சம் ஆகும். முதலிடத்தில் 6,032 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் விற்பனை உடன் 2023ஆம் ஆண்டும், 2வது இடத்தில் 6,021 கார்கள் விற்பனை உடன் 2022ஆம் ஆண்டும் உள்ளன. கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட 5,712 ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் எத்தனை எலக்ட்ரிக் கார்கள் அடங்குகின்றன என்கிற விபரம் கிடைக்க பெறவில்லை.

ஆனால், மற்ற பெட்ரோல் என்ஜின் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களுக்கு இணையாக ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் ரோல்ஸ்-ராய்ஸின் வழக்கமான சிறந்த விற்பனை காரான கல்லீனன் எஸ்யூவியை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதுவரையில், உலகில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் மற்றும் ஒரே எலக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் இவி மட்டுமே ஆகும்.
வெளிநாடுகளில் கடந்த சில வருடங்களாகவே விற்பனையில் உள்ள ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரை இந்தியாவில் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்தது. 2 கதவுகளை மட்டுமே கொண்ட கூபே-ஸ்டைலிலான எலக்ட்ரிக் காராக விளங்கும் இதில் 102kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 530கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

இந்த அல்ட்ரா-லக்சரி எலக்ட்ரிக் காரில் முன்னால் ஒன்று, பின்னால் ஒன்று என 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இவற்றின் உதவியுடன் 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த காரில் வெறும் 4.2 வினாடிகளில் எட்டிவிடலாம். ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரில் ஆக்டிவ் சஸ்பென்ஷன் மற்றும் 4-வீல் ஸ்டேரிங் சக்கரம் செட்-அப் வழங்கப்படுகிறது.
எலக்ட்ரிக் கார் என்பதால், ஸ்பெக்டர் இவி-இன் உடல் வலிமையை குறைவாக மதிப்பிட வேண்டாம். மற்ற ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை காட்டிலும் இந்த எலக்ட்ரிக் காரின் பாடி பேனல்கள் 30% கூடுதல் வலிமையானவை ஆக வழங்கப்படுகின்றன. இந்தியாவில் தற்சமயம் ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.50 கோடியில் இருந்து துவங்குகின்றன. இதன் மூலமாக, இந்தியாவின் விலைமிக்க எலக்ட்ரிக் காராக இது விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் இதுவாகும். இருப்பினும், இந்தியாவில் மாதத்திற்கு குறைந்தது ஒருவராவது ஸ்பெக்டர் இவி எலக்ட்ரிக் காரை வாங்குகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில்தான் ஸ்பெக்டர் இவி காரின் புதிய 'பிளாக் பேட்ஜ்' (Black Badge) வெர்சன் கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. ஆனால், இன்னும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. இது இல்லாமல், இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் மற்றொரு எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யவும் ரோல்ஸ்-ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
