இந்தியர்கள் கால வாரி விட மாட்டாங்க என்றால் டாடா மீண்டும் இதில் ஒரு காரை கொண்டுவரலாம்! பேச்சு போய்ட்டு இருக்கு
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்வதில் இருந்துதான் டாடா மோட்டார்ஸின் வாகனங்கள் உற்பத்தி ஆரம்பித்தாலும், தற்சமயம் நம் நாட்டில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. இதற்கு காரணம், கடந்த காலங்களில் இருந்து டாடாவில் அறிமுகம் செய்யப்பட்டுவரும் தரமான கார்கள் ஆகும். அவ்வாறான தரமான கார்களுள் ஒன்றாக சுமோ (Sumo)-ஐ சொல்லலாம். ஒரு சமயத்தில், டாடா சுமோ காரை வைத்திருந்தாலே மிக பெருமையாக பலர் நினைத்தனர்.
சுமோவை போல், நானோ (Nano) காரும் டாடா மோட்டார்ஸின் பாராட்டுக்குரிய முயற்சி ஆகும். செல்வந்தர்களால் மட்டுமே வாங்கப்பட்டு கொண்டிருந்த கார்களை, மிடில்-கிளாஸ் மக்களும் சிரமமின்றி வாங்க வேண்டும் என்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பார்த்து பார்த்து உருவாக்கிய கார், நானோ ஆகும்.

வெறும் ரூ.1 லட்சம்- 2 லட்சத்தில் எல்லாருக்குமான காரை வழங்க வேண்டும் என்கிற முயற்சியாக நானோவை டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், மிகவும் குறைவான செலவில் உருவாக்கப்பட்டதே கடைசியில் நானோ கார்களின் விற்பனைக்கு பெரிய பிரச்சனையாக முடிந்துபோனது. டாடா நானோ காரின் வரலாற்றை உங்களில் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருவோம்... டாடா மோட்டார்ஸில் இருந்து மீண்டும் சுமோ மற்றும் நானோ கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. தற்போதைக்கு இது வதந்தியாகவே உள்ளது. மற்றப்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுள் ஒருத்தரும் இதை உறுதிப்படுத்தவில்லை.

டாடா சுமோ கார் ஒருவேளை விற்பனைக்கு வந்தால், அதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சத்திற்குள் எதிர்பார்க்கிறோம். டாடா மோட்டார்ஸின் அளவில் பெரியதான எம்பிவி (MPV) ரக காரான சுமோ, மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டால் 7-சீட்டர் அல்லது 9-சீட்டர் எம்பிவி காராக விற்பனை செய்யப்படலாம்.
புதிய சுமோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. தொழிற்நுட்ப வசதிகளாக, தற்போதைய டாடா கார்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்டவை புதிய சுமோ காரிலும் வழங்கப்படலாம்.

சுமோவை போலவே, முற்றிலும் புதிய தோற்றத்தில் நானோ காரை அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் முயற்சிக்கும். இருப்பினும், இப்போது அறிமுகம் செய்தாலும், முடிந்தவரையில் குறைவாக ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையிலான விலையில் மட்டுமே நானோவை அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் விரும்பும் என எதிர்பார்க்கிறோம். வெறும் 4 பேர் மட்டுமே அமரக்கூடியதாக புதிய நானோ இருக்கும்.
நமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களில் விசித்திரமானது என்னவென்றால், புதிய டாடா நானோ ஆனது பவர்ஃபுல்லான பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படும் என்பதாகும். சுமார் 1,000 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறக்கூடியதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30கிமீ மைலேஜ் தரக்கூடியதாகவும் புதிய டாடா நானோ இருக்கும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சுமோ மற்றும் நானோ கார்களின் மறுஅறிமுகம் குறித்த இந்த தகவல்களில் நிறைய நம்ப முடியாத விஷயங்கள் உள்ளன. முக்கியமாக, புதிய நானோ காரில் சுமார் 1,000 என்.எம் வரையிலான டார்க் திறன் என்ஜினில் இருந்து கிடைக்கும் என்பது முற்றிலும் விசித்திரமாக உள்ளது.
அடுத்த சில வருடங்களுக்கு என்னென்ன மாதிரியான கார்களை அறிமுகம் செய்வது என்பது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டு, அதற்கான செயல்களில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களில் இல்லாத புதிய சுமோ மற்றும் நானோ கார்கள் திடீரென புதிய தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









