இந்தியாவில் கார் தொழிற்சாலையை திறக்க எவ்வளவு யோசிச்சாங்க! புதிய மைல்கல்லை கடந்தாச்சு!!
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்று ஆகும். அது மட்டுமில்லாமல், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் விற்பனை செய்வதை காட்டிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தான் இந்த நிறுவனம் அதிக கார்களை ஏற்றுமதி செய்கிறது. அந்த அளவிற்கு, கார்களை உற்பத்தி செய்வதற்கான மையமாக இந்தியாவை பயன்படுத்திவரும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கார்கள் உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனமானது செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இணைந்தது ஆகும். இந்த இரு நிறுவனங்களும் தனித்தனி பிராண்டின் கீழ் கார்களை விற்பனை செய்தாலும், ஒன்றாக தான் இணைந்து கார்களை உற்பத்தி செய்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவில் கார்கள் உற்பத்தியில் 5 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்துள்ளது. ஆனால், ஆரம்பத்தில் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்ய இந்த கூட்டணி நிறுவனம் மிகவும் யோசித்தது. ஏனெனில், அந்த சமயத்தில் குறைவான எண்ணிக்கையிலான கார் மாடல்கள் மட்டுமே ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தன.
இருப்பினும், அப்போது இருந்த ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் வெளிநாட்டு மாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆக இருந்ததால், அவை நம்ம ஊர் கால சூழ்நிலைக்கு ஏற்றவையாக இல்லாமல் அடிக்கடி பழுதுகளை சந்தித்தன. அவ்வாறு பழுதடையும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கான பாகங்கள் அதிகமாக ஸ்பேர் மார்க்கெட்டில் கிடைக்காததால் இந்த நிறுவனங்களின் கார்களை வாங்கியவர்கள் அதிக பராமரிப்பு செலவுகளை எதிர்கொண்டனர்.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால், இந்தியாவிற்கென பிரத்யேகமாக கார்களை உருவாக்கி விற்பனை செய்வதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்த ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 'எம்.க்யூ.பி ஏ0 இன்' (MQB A0 IN) என்கிற பெயரில் கார்களை உருவாக்குவதற்கான பிளாட்ஃபாரத்தை உருவாக்கின.
இந்த பிளாட்ஃபாரத்தின் பெயரில் உள்ள 'இன்' என்பது இந்தியாவை குறிக்கிறது. ஏற்கனவே ஐரோப்பாவில் பயன்பாட்டில் இருந்த 'எம்.க்யூ.பி ஏ0' பிளாட்ஃபாரத்தை இந்தியாவிற்கென சில மாற்றங்களை செய்து உருவாக்கப்பட்ட 'எம்க்யூபி ஏ0 இன்' பிளாட்ஃபாரத்தில் இருந்து கடந்த சில வருடங்களில் மட்டும் ஏகப்பட்ட ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதாவது, ஒரே மாதிரியான கார்களை சிறு சிறு வித்தியாசங்கள் உடன் உருவாக்கி ஸ்கோடா ஆட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. இதன் மூலமாக, இரு நிறுவனங்களுக்கும் கார்கள் உற்பத்தியில் பெரிதும் செலவை குறைக்க முடிகிறது. மேலும், அதிக எண்ணிக்கையிலான கார்களை உற்பத்தி செய்ய முடிகிறது.
இதன் மூலமாகவே, கார்கள் உற்பத்தியில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் 5 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்துள்ளன. 2001ஆம் ஆண்டில் மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தொழிற்சாலையை திறந்த ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் முதலாவதாக ஆக்டேவியா (Octavia) காரை உருவாக்கியது. தற்போது அதே தொழிற்சாலையில் 5 லட்சமாவது காராக வெளியேற்றப்பட்டு இருப்பது, ஸ்கோடா கைலாக் (Kylaq) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்களில் இருந்து ஸ்கோடா லாரா, சூப்பர்ப், கோடியாக், குஷாக், ஸ்லாவியா என பல பிரபலமான ஸ்கோடா கார்கள் இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், கார்களை உற்பத்தி செய்வதற்கு என்றே இந்தியாவை ஏற்ற நாடாக பார்க்கும் நிறுவனங்களுள் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்றாகும். ஆதலால், இந்த 5 லட்ச கார்கள் உடன் நிறுத்திக் கொள்ளாமல் மேலும் பல ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









