சிஇஓ-கள் வேற வேறயா இருந்தாலும், ஒண்ணா சேர்ந்து இதை சாதிச்சு காட்டியிருக்காங்க! 11 வருட கடின உழைப்பின் பலன்!
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், கார்களை இந்தியாவிலேயே இந்த கூட்டணி நிறுவனம் உற்பத்தி செய்வது ஆகும். இந்தியாவில் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுள் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையும் ஒன்றாகும். கார்களை உருவாக்குவதுடன், அவற்றிற்கான என்ஜின்களையும் இந்த ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியில் உருவாக்குகின்றனர். இந்த நிலையில், கார்களுக்கான என்ஜின்களை உற்பத்தி செய்வதில் இந்த கூட்டணி நிறுவனம் பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைத்து செயல்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இது ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமாகும். இதன் மூலம், கார்களை உற்பத்தி செய்வதில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரு நிறுவனங்களும் பலனை அனுபவித்து வருகின்றன.

அதாவது, ஒரே மாதிரியான கார்களை உருவாக்கி, ஃபினிஷிங் டச்சை மட்டும் வித்தியாசமாக கொடுத்து ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என தனித்தனியான பிராண்ட்களில் விற்பனை செய்து வருகின்றனர். கார்கள் மட்டுமின்றி, அவற்றில் பொருத்துவதற்கான என்ஜின்களையும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இரண்டும் ஒன்றாக இணைந்து உருவாக்குகின்றன.
அவ்வாறு உருவாக்கிய கார் என்ஜின்களின் எண்ணிக்கையில் 5 இலட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்துள்ளது. புனே தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட இந்த கார் என்ஜின்கள் யாவும் முழுக்க முழுக்க இந்தியாவில் கிடைக்கக்கூடிய பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.

கார்களை உருவாக்குவதை காட்டிலும் அவற்றிற்கான என்ஜின்களை உருவாக்குவதுதான் பெரிய வேலையே. இதனை புனேவில் நிலவும் வாகன உற்பத்திக்கான சூழலும், திறன் வாய்ந்த பணியாளர்களும் திறம்பட செய்து காட்டி, உலக தரத்திலான என்ஜின்களை 5 லட்சம் எண்ணிக்கைகளில் உருவாக்கி சாதனை படைத்துள்ள ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தன்னை தானே புகழ்ந்துக் கொண்டுள்ளது.
புனேவில் சாகான் (Chakan) என்கிற பகுதியில் அமைந்துள்ள ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தொழிற்சாலையில் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து கார்களுக்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உற்பத்தி செய்யப்படும் என்ஜின்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையில் தொடர்ந்து முதலீடு செய்துவரும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவை உலகின் பெரும் ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக திகழ வைப்பதில் உறுதிக் கொண்டுள்ளது.

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புனே சாகான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ (TSI) பெட்ரோல் என்ஜின் (Petrol Engine) ஆனது ஸ்கோடா நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான கைலாக் (Kylaq) காரில் இருந்து ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) கார் வரையில் ஏகப்பட்ட ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களில் பொருத்தப்படுகின்றன.
இத்தனைக்கும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களுக்கு தனித்தனி சிஇஓ-க்கள் உள்ளனர். இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் சிஸ்டத்தில் அட்வான்ஸ்டு எக்ஸாஸ்ட் எமிஷன் டெக்னாலஜி (Advanced Exhaust Emission Technology) பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினில் ஆக்டீவ் சிலிண்டர் டெக்னாலஜி (Active Cylinder Technology) வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2014ஆம் ஆண்டில் இருந்து வெறும் 11 வருடங்களில் 5 இலட்சம் கார் என்ஜின்கள் உற்பத்தி என்பது பெரிய விஷயமாகும். இதனை சர்வ சாதாரணமாக ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செய்து காட்டியுள்ளது. இதில் இருந்து கார்களை உற்பத்தி செய்வதில் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தொழிற்சாலை எந்த அளவிற்கு ஓய்வில்லாமல் உழைத்து வருகிறது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









