கப்பல் கப்பலா மேட்-இன்-இந்தியா கார்கள்... மஹாராஷ்டிரா கார் ஆலைகளுக்கு ஓய்வே இல்லை!
ஸ்கோடா ஆட்டோ ஃபோஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India), நம் நாட்டில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோஸ்வேகன் நிறுவனத்துக்கும் இடையேயான கூட்டணி நிறுவனம் தான், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஆகும். இந்திய சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்ற கார்களை இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து உருவாக்கி விற்பனை செய்கின்றன. இதனால்தான், சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா மற்றும் ஃபோஸ்வேகன் கார்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.
இதன் மூலமாக, இரு நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் செலவு மிச்சமாகிறது. மேலும், ஸ்கோடா மற்றும் ஃபோஸ்வேகன் நிறுவனங்கள் இந்தியாவை வெளிநாடுகளுக்கான கார் உற்பத்தி மையமாக கருதுகின்றன. இதனை வெளிக்காட்டும் வகையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்களின் எண்ணிக்கை வெளிவந்துள்ளது.

இதனை மும்பை துறைமுகம் (Mumbai Port) வெளியிட்டுள்ளது. ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திடம் மொத்தம் 2 கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இரண்டுமே மஹாராஷ்டிரா (Maharashtra)-இல் தான் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மும்பை துறைமுகம் வழியாக தான் வெளிநாடுகளுக்கு செல்கின்றன.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை தான் வெளிநாடுகள் பயன்படுத்த வேண்டும் என்கிற கொள்கையில் இந்திய அரசு கடந்த பல வருடங்களாகவே தீவிரமாக உள்ளது. இந்தியாவின் 'மேட்-இன்-இந்தியா' (Made-in-India) திட்டத்திற்கு ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்து வருகிறது.

கடந்த 2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் தங்களது துறைமுகத்தில் இருந்து அதிக சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த நிறுவனங்களுள் ஒன்றாக ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தை மும்பை துறைமுகம் அங்கீகரித்துள்ளது. இந்த கூட்டணி நிறுவனத்தில் இருந்து இதுவரையில் இந்தியாவில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் கார்களுக்கும் மேலாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் 2022ஐ காட்டிலும் சுமார் 38% அதிக ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்கள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2023இல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஏறக்குறைய 30% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த 2024ஆம் ஆண்டில் 2023ஐ காட்டிலும் ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஏற்றுமதி 20% அதிகமாக இருந்தது. மேலும், 2024இல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்களின் எண்ணிக்கையில் 40% வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த புள்ளி விபரங்கள் யாவும் மும்பை துறைமுகத்தால் வெளியிடப்பட்டவை ஆகும்.
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கடந்த 2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் வரையில் 43 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மேக்-இன்-இந்தியா ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் கார்கள் ஆசியா முழுவதும் கொண்டு செல்லப்படுவது மட்டுமின்றி, ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் மட்டுமின்றி, இன்னும் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாகவே பார்க்கின்றன. ஏனெனில், நம் நாட்டில் வாகனங்களை உற்பத்தி செய்வதும், அவற்றை மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வதும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications









