8 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்ட காரில் பாதுகாப்பு எல்லாம் ஓகே! எத்தனை ஸ்டார் கொடுத்தாங்க தெரியுமா?
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார், கைலாக் (Kylaq) ஆகும். உலகளவில் ஸ்கோடா கார்கள் பாதுகாப்பு மிக்கவைகளாக விளங்குகின்றன. இதனால் புதிய கைலாக் காரும் கிராஷ் டெஸ்ட்டில் மதிப்பெண்களை வாரி குவிக்கும் என எதிர்பார்த்தோம். அதன்படி, இந்தியாவில் நடத்தப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் (Bharat NCAP Crash Test)-இல் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்று ஸ்கோடா கைலாக் அசத்தியுள்ளது. இந்த சோதனையில் கைலாக் பெற்ற மதிப்பெண்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார் (SUV Car)-களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனாலேயே முடிந்தவரையில் அனைத்து கார் நிறுவனங்களும் குறைந்தது ஒரு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை ஆவது தொடர்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கின்றன.

அந்த வகையில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டில் குஷாக் என்கிற சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. குஷாக்கிற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், கைலாக் என்கிற மற்றொரு சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரை ஸ்கோடா அறிமுகம் செய்துள்ளது. கைலாக் கார் மீது ஸ்கோடா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.
அதற்கேற்றப்படி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெற்று கைலாக் அசத்தியுள்ளது. பாரத் என்சிஏபி ஆனது முழுக்க முழுக்க இந்தியாவிற்கென கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் மத்திய அரசு அறிமுகம் செய்த கிராஷ் டெஸ்ட் அமைப்பாகும். க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி, ஐரோப்பிய என்சிஏபி உள்ளிட்டவை செயல்படும் நிலையில், இந்திய கார்களின் தரநிலைகளை மக்கள் அறிந்துக் கொள்வதற்காக பாரத் என்சிஏபி அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 1 வருடத்தில் பல்வேறு கார்கள் பாரத் என்சிஏபி-இல் உட்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஸ்கோடா கைலாக்கும் மோதல் சோதனைகளில் ஈடுப்படுத்தப்பட்டு 5க்கு முழு 5 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரியவர்கள் பாதுகாப்பில் கைலாக் கார் 32க்கு 30.88 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதாவது, பெரியவர்களுக்கு 100க்கு 97 சதவீத பாதுகாப்பை வழங்கக்கூடியதாக கைலாக் உருவாக்கப்பட்டுள்ளது.
மறுப்பக்கம், குழந்தைகள் பாதுகாப்பில் இந்த ஸ்கோடா காருக்கு 49க்கு 45 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 100க்கு 92%. இதன் மூலமாக, இந்தியாவில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் குழந்தைகள் பாதுகாப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற காராக கைலாக் விளங்குகிறது. பெரியவர்கள் பாதுகாப்பை பொறுத்தவரையில், காரை முன்பக்கமாக மோதவிட்டு பார்த்ததில் 94% பாதுகாப்பை கைலாக் வழங்கியுள்ளது.

அதுவே, வளையாத தடுப்பின் மீது சைடில் மோதவிட்டு பார்த்ததில், 99% பாதுகாப்பை வழங்குகிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் முன்பக்க மற்றும் சைடு மோதல் சோதனைகளில் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ள புதிய ஸ்கோடா கைலாக் காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளுக்கு 13க்கு 9 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 100க்கு 69 சதவீதம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கைலாக் கார் மீது ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. இதனால், முடிந்தவரையில் கைலாக் காரை நன்கு விளம்பரப்படுத்த ஸ்கோடா முயற்சிக்கும். இதற்கு பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டின் 5 ஸ்டார் மதிப்பெண் ஆனது மிகவும் உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









