ஒரே மாதத்தில் 1 லட்சம் கஸ்டமர்கள்... சுஸுகி ஷோரூம்களில் நிற்க கூட இடமில்லாமல் கூட்டம் அள்ளுது!
ஜப்பானின் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் (Suzuki Motor Corporation) நிறுவனத்தின் இருசக்கர வாகன துணை நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL) நடந்து முடிந்த செப்டம்பர் 2025 மாதத்தின் விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பண்டிகை கால தொடக்கம் மற்றும் சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) சீர்திருத்தங்களின் காரணமாக, கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் இந்த நிறுவனம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 550 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்த 99 ஆயிரத்து 185 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 25% அதிகமாகும்.

அதாவது, சுஸுகி 2-வீலர்களின் விற்பனை 2024 செப்டம்பரை காட்டிலும் நான்கில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. மேற்கூறப்பட்ட 1,23,550 வாகனங்களில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மட்டுமில்லாமல், கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் அடங்குகிறது.
உள்நாட்டுச் சந்தையில் மட்டும் SMIPL நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 886 இருசக்கர வாகனங்களை விற்று கடந்த ஆண்டு செப்டம்பரை விட 37% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே செப்டம்பர் மாதத்தில் 77 ஆயிரத்து 263 இரு சக்கர வாகனங்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் வெளிநாட்டு ஏற்றுமதியை பொறுத்தவரையில், 2024 செப்டம்பரில் 21 ஆயிரத்து 922 இருசக்கர வாகனங்களை சுஸுகி ஏற்றுமதி செய்திருந்த நிலையில், 2025 செப்டம்பரில் 17 ஆயிரத்து 664 வாகனங்களை மட்டுமே SMIPL ஏற்றுமதி செய்துள்ளது. இந்த விற்பனைச் செயல்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் தீபக் முத்ரேஜா, "செப்டம்பர் SMIPL-க்கு ஒரு குறிப்பிடத்தக்க மாதமாக அமைந்தது.
பண்டிகை கால மகிழ்ச்சி 2-வீலர்களுக்கு வலுவான தேவையாக மாறியது. இது உள்நாட்டு விற்பனையில் 37% வளர்ச்சியைப் பதிவு செய்ய எங்களுக்கு உதவியது. சமீபத்திய GST குறைப்பு, எங்கள் இருசக்கர வாகனங்களை இன்னும் மலிவு விலையில் கிடைக்கச் செய்து, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இந்த உத்வேகம் பண்டிகை காலத்திலும் அதற்குப் பிறகும் தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் எங்கள் நம்பகமான மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உடன் ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய முடியும்" என்றார். வாடிக்கையாளர் திருப்தியை மேலும் மேம்படுத்தும் விதமாக, SMIPL தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக 88 கோடி ரூபாய் மதிப்புள்ள உதிரிபாக விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
இது கடந்த 2024 செப்டம்பர் மாதத்தை விட 17% அதிகமாகும். சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மேற்கொண்ட மற்ற நடவடிக்கைகள் என்று பார்த்தால், கடந்த மாதத்தில் சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் (Suzuki V-STROM SX) மோட்டார்சைக்கிளை புதிய கிராபிக்ஸுடன் கூடிய நான்கு புதிய கலர் ஆப்ஷன்களில் SMIPL அறிமுகப்படுத்தியது.

மேலும், இமயமலைக்கு தனது முதல் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் பைக் பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தது. வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்த, அவெனிஸ் (Avenis) ஸ்கூட்டருக்காக நருடோ (Naruto) உடன் கூட்டணி சேர்ந்து செயல்பட துவங்கியதுடன், ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank) உடன் இணைந்து இந்தியா முழுவதும் இருசக்கர வாகன சில்லறை நிதியுதவியையும் கடந்த மாதத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரிவுப்படுத்தியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2006ஆம் ஆண்டில் இருந்து செயல்பட துவங்கிய சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஆண்டுக்கு 13 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் உடன் உள்ளது. இந்த நிறுவனம் 125சிசி ஸ்கூட்டர்கள், 150சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள், மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பிக்-அப் பைக்குகளை உற்பத்தி செய்கிறது. இவற்றின் மூலமாகவே சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 25% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









