எத்தனை பேரது வாழ்க்கையை புரட்டி போட போகுதோ... வெறும் ரூ.3.99 லட்சத்தில் புதிய டாடா ஏஸ் வாகனமா?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் முன்னிலையில் இருப்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயமாகும். இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையில் மட்டுமே ஈடுப்பட்டுவந்த டாடா நிறுவனம், அதன் மூலம் கிடைத்த நம்பிக்கையில்தான் கடந்த 1998ஆம் ஆண்டில் கார்கள் விற்பனையில் இறங்கியது. டாடா மோட்டார்ஸின் கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், மக்கள் மத்தியில் மிக பிரபலமாக டாடா ஏஸ் (Ace) உள்ளது.
குறிப்பாக, குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்ற வாகனமாக இந்தியா முழுவதும் டாடா ஏஸ் பலத்தரப்பட்ட மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஏஸ் வாகனத்தில் புது, புது வெர்சன்களை அவ்வப்போது தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவரும் டாடா நிறுவனம், அந்த வகையில் தற்போது புதியதாக ஏஸ் புரோ (Ace Pro) வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஏஸ் புரோ வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் வெறும் ரூ.3.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. புதிய டாடா ஏஸ் புரோ வாகனம் ஆனது ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் மிக பெரும் ஆட்டோமொபைல் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
கண்காட்சியில் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலக்ட்ரிக் வெர்சனிலும் புதிய டாடா ஏஸ் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வகையில், தற்போது அந்த அனைத்து ஆப்ஷன்களிலும் டாடா ஏஸ் புரோ வாகனம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள டாடா மோட்டார்ஸின் 1250 கமர்ஷியல் வாகன டீலர்ஷிப் ஷோரூம்கள் எதன் ஒன்றிலும் புதிய ஏஸ் புரோ வாகனத்தை முன்பதிவு செய்யலாம்.
அல்லது, கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதற்காக டாடா மோட்டார்ஸ் வைத்திருக்கும் 'ஃப்ளீட் வெர்ஸ்' (Fleet Verse) இணையத்தள பக்கத்திலும் புதிய ஏஸ் புரோ வாகனத்தின் எந்தவொரு வேரியண்ட்டையும் புக் செய்யலாம் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏஸ் புரோ வாகனத்தை கஸ்டமர்கள் வாங்குவதற்கு ஏதுவாக இந்தியாவின் பல முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் உள்ளது.
புதிய டாடா ஏஸ் புரோ வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், இந்த வாகனத்தில் அதிகப்பட்சமாக 750 கிலோ வரையிலான சுமைகளை கொண்டு செல்லலாம். இந்த வாகனத்தின் 1.98 மீட்டர் நீளம் கொண்ட பொருட்களை வைக்கும் பகுதி பலத்தரப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏதுவான டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது தேவையை பொறுத்து அரை டெக் (Deck) அல்லது ஃபிளாட் பெட் (Flatbed) ஆப்ஷனில் புதிய ஏஸ் புரோ வாகனத்தை வாங்கலாம். அதி வலிமைமிக்க சேசிஸில் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய ஏஸ் வாகனத்தால் எந்தவொரு பாதையிலும் இயங்க முடியும். இவற்றை விட முக்கியமாக, பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான எரிபொருள் ஆப்ஷன்களில் ஏஸ் புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 30 எச்பி மற்றும் 55 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஏஸ் புரோ கிடைக்கும். சிஎன்ஜி ஆப்ஷனிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் கிடைக்கும் என்றாலும், ஏஸ் புரோ சிஎன்ஜி வாகனத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்க வைக்கலாம்.
அதேநேரம், அவசர காலத்திற்கு பெட்ரோலிலும் இந்த சிஎன்ஜி வாகனத்தை ஓட்டலாம். ஏஸ் புரோ எலக்ட்ரிக் வாகனத்தில் அதிகப்பட்சமாக 38 எச்பி மற்றும் 104 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள ஐபி67 சான்றளிக்கப்பட்ட பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 155கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஏஸ் வாகனம் ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதால், அதில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஏஸ் புரோ வாகனம் ஆனது நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என நம்புகிறோம். புதிய டாடா ஏஸ் புரோ வாகனத்தை பற்றிய விரிவான விபரங்களை ஏற்கனவே ஆட்டோ எக்ஸ்போவின் போது பதிவிட்டு இருந்தோம். பார்க்காதவர்கள் அந்த தொகுப்பை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








