5 ஸ்டார் ரேட்டிங் காரின் விலை இவ்ளோ குறைய போகுதா! மாருதி, ஹூண்டாய்க்கு செக் வைக்கும் டாடா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், கடந்த மே மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சூழலில், டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனையில், டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 32க்கு 29.65 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது.

அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 49க்கு 44.90 புள்ளிகளை ஸ்கோர் செய்துள்ளது. இதன் மூலம் பாரத் என்சிஏபி அமைப்பு டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கியுள்ளது. முன்னதாக குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனையிலும் டாடா அல்ட்ராஸ் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் சிஎன்ஜி மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். அதே சமயம் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 6 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 17.78 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 26.03 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் என டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கூல்டு க்ளவ் பாக்ஸ், கேலக்ஸி ஆம்பியண்ட் லைட்டிங், இன்ஃபினிட்டி கனெக்டட் எல்இடி டெயில்லேம்ப்கள், சுறா துடுப்பு ஆன்டெனா மற்றும் 360 டிகிரி ஹெச்டி சர்ரவுண்ட் வியூ சிஸ்டம் ஆகிய வசதிகளும் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை 6.89 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே தற்போதைய நிலையில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் ஜிஎஸ்டி (GST) வரி குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு, டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை குறையவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியின்படி பார்த்தால், டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை அதிகபட்சமாக 1.10 லட்ச ரூபாய் வரை குறையவுள்ளது.
எனவே இனி வரும் மாதங்களில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்சா போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் டாடா அல்ட்ராஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக பாதுகாப்புடன் கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மிகவும் சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. அதிக வசதிகளை கொண்டிருப்பது டாடா அல்ட்ராஸ் காரின் மிக முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








