இந்த டாடா கார் எந்த அளவுக்கு பாதுகாப்பானதுனு இப்போ தெரிந்துவிடும்! புக்கிங்கை போடும் முன்ன இதை தெரிஞ்சிக்கோங்க
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை ஓட்டி பார்த்து சமீபத்தில்தான் எங்களது விரிவான ரிவியூவை வழங்கி இருந்தோம். காரின் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களை பற்றி விரிவாக நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குள் மோத செய்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் (Youtube) சேனலில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றான டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் அல்ட்ராஸ் ஒன்றாகும். டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான அல்ட்ராஸின் விற்பனை சமீப மாதங்களாக குறைந்து வந்ததை அடுத்து, மேம்படுத்தப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்டேட்டிற்கு முந்தைய அல்ட்ராஸ் கார் சில வருடங்களுக்கு முன்பே குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Global NCAP Crash Test) 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்களை பெற்றது. இன்னும் சொல்ல போனால், இந்தியாவில் இருந்து குளோபல் என்சிஏபி-இல் 5 நட்சத்திரங்களை பெற்ற முதல் கார்களுள் டாடா அல்ட்ராஸ் ஒன்றாகும்.
இதனால்தான், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இனி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கிராஷ் டெஸ்ட்டிலும் சிறப்பான ரேட்டிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்தியாவிற்கான பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட் முடிவுகள் மிக முக்கியமானவைகளாக எதிர்பார்க்கப்படுகின்றன. அதற்கு முன்னதாக, டாடா நிறுவனம் புதிய அல்ட்ராஸ் காரை தனது தொழிற்சாலைக்குள் மோதவிட்டு சோதனை செய்து பார்த்துள்ளது.

இதுதொடர்பாக டாடா நிறுவனத்தால் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பல்வேறு விதமான மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்களை காணலாம். இந்த சோதனைகளில், ஒவ்வொரு விதமான மோதல்களிலும் ஒவ்வொரு விதமான வேகங்களில் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இயக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணிக்கு 64கிமீ வேகத்தில் முன்பக்கமாக கார் மோதலுக்கு உட்படுத்தப்பட்டது.
சாலையின் ஓரத்தில் இருக்கும் வளையக்கூடிய இரும்பின் மீது காரின் முன்பக்கத்தை 64km/h வேகத்தில் மோத செய்து சோதனை செய்யப்பட்டது. அதேபோல், நகரக்கூடிய பொருளின் மீது மணிக்கு 50கிமீ வேகத்தில் காரின் பக்கவாட்டை மோதவிட்டு பார்த்தனர். மேலும், சாலையின் ஓரத்தில் இருக்கும் இரும்பு கம்பத்தின் மீது காரின் பக்கவாட்டில் மோதினால் என்ன நடக்கும் என்பதை மணிக்கு 29கிமீ வேகத்தில் காரை மோத செய்து சோதித்து பார்த்தனர்.
இந்த மோதல் சோதனைகளில் சிறப்பாக செயல்படுவதற்கு ஏதுவாக, 6 ஏர்பேக்குகள் நிலையான அம்சமாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களும் அதிவலிமைமிக்க இரும்பினால் உருவாக்கப்படுகின்றன. 6 ஏர்பேக் மற்றும் வலிமையான இரும்பினால் ஆன உடற்கூடு காரினுள் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியவைகளாக உள்ளன.
புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் மற்ற பாதுகாப்பு அம்சங்களாக இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ESP), காரை ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கைக்கான ஆங்கர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 10.25-இன்ச்சில் எச்டி டிஜிட்டல் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவையும் இந்த புதிய டாடா காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொழிற்சாலைக்குள் நடத்திய இந்த மோதல் சோதனை முடிவுகள் வெளிவருவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் உண்மையில், டாடா நடத்திய சோதனையின் முடிவுகள் பெரியதாக முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. ஏனெனில், பாரத் என்சிஏபி, குளோபல் என்சிஏபி போன்ற 3ஆம் தரப்பினர் மூலம் நடத்தப்படும் மோதல் சோதனை முடிவுகள் தான் முக்கியமானவை ஆகும். இருப்பினும், தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த சோதனைகளின் மூலம் புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய மேலும் புரிதலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications







