டாடா உருவாக்குறது எல்லாம் கார் தானா? அனைவரும் வாங்க துடிக்கும் காரில் செய்யப்பட்ட தரமான சம்பவம்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இல் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டில் நிறைய புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றுள் முக்கியமானது, டாடா கர்வ் (Curvv) ஆகும். டாடா நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) வரிசையில் இந்திய கார்கள் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டாடா கார் என்கிற அளவிற்கு கர்வ் காருக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் ஏற்றாற்போல், டாடா கர்வ் காரில் தரமான ஒரு சம்பவம் செய்யப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு சிறப்பான வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. இருப்பினும் மற்ற கார் நிறுவனங்களில் இருந்து ஒருபடி மேலே இருக்க வேண்டும் என்கிற முயற்சியாக, கர்வ் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது.

ஏனெனில், டாடா கர்வ் ஆனது கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார் ஆகும். அதாவது, காரின் பின்பகுதியில் மேற்கூரை ஆனது வழக்கமான எஸ்யூவி கார்களை காட்டிலும் சற்று சறுகலாக இருப்பதை பார்க்க முடியும். இதன் மூலமாக, கர்வ் காரின் தோற்றம் பலரை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், கர்வ் காரின் வலிமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
அதாவது, ஒரே நேரத்தில் மொத்தம் 3 லாரிகளை கர்வ் காரில் இரும்பு சங்கிலி மூலம் கட்டி இழுத்து சென்றுள்ளனர். கர்வ் காரும் எந்தவொரு பிரச்சனையும் இன்றி திடமாக லாரிகளை இழுத்து சென்றுள்ளது. இத்தனைக்கும் இந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்டது எல்லாம் சாதாரணமான லாரிகள் கிடையாது; டாடா மோட்டார்ஸின் எடைமிக்க கனரக லாரிகள் ஆகும்.

ஒவ்வொரு லாரியின் எடையும் 14 ஆயிரம் கிமீ என மொத்தம் 42 ஆயிரம் கிமீ எடையை டாடா கர்வ் காரில் இழுத்து சென்றுள்ளனர். டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலை வளாகத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சாதனை நிகழ்வை வீடியோவாக காட்சிப்படுத்தி டாடா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் (Youtube) சேனலில் வெளியிட்டுள்ளது.
லாரிகள் மூன்றும் தனித்தனியாக கர்வ் காருடன் இணைக்கப்படாமல், ஒன்றன்பின் ஒன்றாக இரயில் பெட்டிகள் போன்று இணைக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் காணலாம். மற்றப்படி, இந்த சோதனை நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட கர்வ் காரில் என்ன என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பதையும், இது கர்வ் காரின் எந்த வேரியண்ட் என்பதையும் அறிய முடியவில்லை.

டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் க்றையோஜெட் டர்போ டீசல் மற்றும் 1.2 லிட்டர் ஹைப்பரியன் டைரக்ட்-இன்ஜெக்ஷன் பெட்ரோல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சோதனை ஆனது பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆதலால், இதனை யாரும் டாடா கர்வ் காரில் செய்து பார்க்க வேண்டாம் என்பதை கூறிக் கொள்கிறோம். இந்த நிகழ்வின் மூலம் கர்வ் காரின் வலிமையை நம்மால் அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications
