சென்றது எந்த கார்னு தெரியாம சாலையில் சென்றவர்களுக்கு பெரிய குழப்பம்! இதுமாதிரியான கார்களுக்குதான் இனி டிமாண்ட்
சிஎன்ஜி (CNG) கார்களுக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை புரிந்துக் கொண்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் புது, புது சிஎன்ஜி கார்களை கடந்த சில வருடங்களாக அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) மிகவும் முனைப்புடன் உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாருதி சுஸுகி கார்களிலும் சிஎன்ஜி வெர்சன்கள் விற்பனையில் உள்ளன. மாருதி சுஸுகியை பின்பற்றி மற்ற கார் நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்துள்ளன.
அத்தகைய கார் கம்பெனிகளுள் ஒன்று, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகும். இந்தியாவில் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி, ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களுக்கு அடுத்து 3வது இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸில் இருந்தும் பல்வேறு உடலமைப்புகளில் சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள டாடா சிஎன்ஜி கார், டாடா கர்வ் சிஎன்ஜி (Curvv CNG) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய கர்வ் கார்களை அறிமுகம் செய்தது. வித்தியாசமான கூபே ஸ்டைலிலான எஸ்யூவி ரக காராக கர்வ் அறிமுகம் செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, கர்வ் இவி (Curvv EV) என்கிற எலக்ட்ரிக் காரும் (Electric Car) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கர்வ் சிஎன்ஜி காரும் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதற்கு முன்னதாக, கர்வ் சிஎன்ஜி கார் ஒன்று புனே (Pune)-இல் சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா சிஎன்ஜி (Grand Vitara CNG) காருக்கு போட்டியாக கொண்டுவரப்படும் கர்வ் சிஎன்ஜி கார் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும், காரின் தோற்றம் பற்றிய சில விபரங்கள் இந்த சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களின் மூலம் நமக்கு தெரிய வருகின்றன.
கர்வ் பெட்ரோல்/ டீசல் காருக்கும், கர்வ் இவி எலக்ட்ரிக் காருக்கும் இடையே தோற்றத்தில் எந்த அளவிற்கு பெரியதாக வித்தியாசம் இல்லையோ அதேபோன்று கர்வ் சிஎன்ஜி காரின் தோற்றத்திலும் பெரியதாக வித்தியாசம் இருக்காது என்பது தற்போது வெளியாகி உள்ள ஸ்பை படங்களின் மூலம் உறுதியாகிறது.

சிஎன்ஜி கார் என்பதை குறிக்கும் வகையில் காரை சுற்றிலும் நிச்சயமாக 'iCNG' முத்திரையை எதிர்பார்க்கலாம். சிஎன்ஜி காரின் சோதனை ஓட்டம் என்றாலே மாசு உமிழ்வை அளவிடும் கருவிகள் காரின் பின்பக்கத்தில் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த சோதனை ஓட்டத்தில் டாடா கர்வ் சிஎன்ஜி காரின் பின்பக்கத்தில் அவ்வாறான கருவிகள் எதுவும் இல்லை.
இதை வைத்து பார்க்கும்போது, கர்வ் சிஎ்ன்ஜி காரின் உட்புற பாகங்கள் இந்த சோதனை ஓட்டத்தில் சோதிக்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது. வெளிப்பக்க தோற்றத்தில் மட்டுமின்றி, உட்புற தோற்றத்திலும் புதிய கர்வ் ஐ-சிஎன்ஜி காரில் பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய கர்வ் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.
இந்த என்ஜினுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கு காரின் பின்பக்கத்தில் 2 சிலிண்டர்கள் வழங்கப்படும். இதேபோன்றதான செட்-அப் தான் டாடா நெக்ஸான் ஐசிஎன்ஜி (Nexon iCNG) காரிலும் வழங்கப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை சமயத்தின்போது புதிய டாடா கர்வ் ஐசிஎன்ஜி கார் அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான் காரை போலவே, கர்வ் எஸ்யூவி காரையும் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. சிஎன்ஜி கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய கர்வ் ஐசிஎன்ஜி காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications









