லிட்டருக்கு 25.9கிமீ மைலேஜ் தரும் காரை தான் டாடா இத்தனை நாளா மறைச்சு மறைச்சு உருவாக்கிட்டு இருந்துச்சா!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) எஸ்யூவி கார் மாடல்களின் புதிய டர்போ பெட்ரோல் (Turbo Petrol) வெர்சன்களை சமீபத்தில் வெளியீடு செய்த நிலையில், வருகிற ஜனவரி மாத அறிமுகத்திற்கு முன்னதாக இந்த டர்போ பெட்ரோல் கார்களின் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த பெட்ரோல் கார்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை தொடர்ந்து, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள நாட்ராக்ஸ் (NATRAX) சோதனை மையத்தில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட ஹாரியர் மற்றும் சஃபாரி கார்கள் சோதனை செய்யப்பட்ட காணொளியையும் டாடா மோட்டார்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் என்ஜினின் 'ஹைபீரியன்' (Hyperion) பேட்ஜ் பொருத்தப்பட்ட சிவப்பு நிற டாடா ஹாரியர், சோதனை ஓட்டங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, டாடா சியரா (Sierra) எஸ்யூவி காரில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதே புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட சஃபாரி ரெட் டார்க் எடிஷன் (Red Dark Edition) சோதனை செய்யப்பட்டது.
நாட்ராக்ஸ் பந்தய களத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்படி, ஹாரியர் எஸ்யூவி லிட்டருக்கு 25.9 கி.மீ மைலேஜ் (Mileage)-ஐ அளித்தது. அதேநேரம், சஃபாரி 25 கி.மீ/லி மைலேஜை எட்டியது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் எஸ்யூவி கார்களில் ஹாரியர் அடைந்த மைலேஜ் ஆனது இந்தியாவில் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட மைலேஜ் ஆக, இந்திய சாதனை புத்தகம் (India Book of Records) மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதே சோதனை ஓட்டத்தில், புதிய சஃபாரி பெட்ரோல் கார் மணிக்கு 216 கி.மீ என்கிற உச்சபட்ச வேகத்தை எட்டியது. இந்த இரண்டு எஸ்யூவி கார்களிலும் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. இது அதிகப்பட்சமாக 170 எச்பி ஆற்றலையும், 280 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜினுடன் கூடிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி கார்கள் தற்போது வரையில் டீசல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பெட்ரோல் வெர்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படுவது, இந்த இரு கார்களுக்கான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கணிசமாக விரிவுபடுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களை சேர்த்திருப்பதன் மூலம், பெட்ரோல் கார்களுக்கும் அதிக தேவை உள்ள சந்தையில், டாடாவின் ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளின் மார்க்கெட்டை விரிவுப்படுத்த முடியும்.

இதற்கிடையில், மூடிய கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை ஓட்டம் ஆனது டாடாவின் புதிய 'ஹைபீரியன்' பெட்ரோல் என்ஜினின் செயல்திறனை நிரூபிக்கிறது என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதன் முடிவுகள் நிஜ உலக சாலை சூழ்நிலைகளைப் பிரதிபலிக்காது என்றும் டாடா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பெட்ரோல் ஹாரியர் மற்றும் சஃபாரிக்கான அதிகாரப்பூர்வ அறிமுகம் மற்றும் விலை அறிவிப்பு அடுத்த மாதம் (ஜனவரி 2026) எதிர்பார்க்கப்படுகிறது. 'ஹைபீரியன்' பெட்ரோல் கார்களை டீலர்ஷிப்களுக்குக் கொண்டு வர டாடா மோட்டார்ஸ் தயாராகி வரும் நிலையில், குறிப்பிட்ட தேதிகள் அல்லது விலையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications









