5-ஸ்டார் ரேட்டிங்கை சும்மா தூக்கி கொடுத்திடல! டாடா நிறுவனத்தின் மொத்த அனுபவமும் இந்த காரில் தெரியுது!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆக ஹெரியர்.இவி (Harrier.ev) சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டாடா நிறுவனத்தின் புதிய விலைமிக்க எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஹெரியர்.இவி-இன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.21.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 23ஆம் தேதி இந்த டாடா எலக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test)-இல் உட்படுத்தப்பட்டு, தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் ஆனது இந்தியாவிற்கென மத்திய அரசு பிரத்யேகமாக கொண்டுவந்த கார் கிராஷ் டெஸ்ட் அமைப்பு ஆகும். அதாவது, உலகளவில் க்ளோபல் என்சிஏபி, ஆசியன் என்சிஏபி, ஐரோப்பிய என்சிஏபி உள்ளிட்டவை ஏற்கனவே கடந்த சில வருடங்களாக செயல்பட்டுவரும் நிலையில், இந்திய அரசு தனக்கான பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்பை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது.

முதலாவதாக, கர்வ் (Curvv) மற்றும் பஞ்ச் (Punch) என்கிற இரு டாடா கார்கள் தான் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஸ்கோடா (Skoda) கார்கள் உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு டாடா காராக ஹெரியர் இவி பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் எதிர்பார்த்ததை போல், புதிய டாடா ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீடுகளை பெற்றுள்ளது. இதைவிட ஆச்சிரியம் என்னவென்றால், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் 32க்கு முழு 32 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

பொதுவாக, 5-ஸ்டார் ரேட்டிங்கை பெறும் கார்கள் கூட அனைத்து கார்களும் முழு 32 மதிப்பெண்களை பெறுவது கிடையாது. அதாவது, 32க்கு ஒன்று, இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெறும் கார்களுக்கு கூட 5-ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பார்த்தால், ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் மூலமாக ஒரு அபூர்வமான சாதனையை டாடா மோட்டார்ஸ் நிகழ்த்தி உள்ளது.
அதேநேரம், பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களை ஹெரியர் இவி பெற்றுள்ளது. இந்த என்சிஏபி மோதல் சோதனையில், காருக்கு முன்பக்கமாக ஏற்படுத்தப்பட்ட மோதலில் ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் முன் இருக்கை பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

அதேபோல், நகரக்கூடிய பொருளின் மீது காரில் பக்கவாட்டாக மோதினாலோ அல்லது காரின் பக்கபாட்டில் வேறொரு வாகனம் மோதினாலோ பயணிகள் அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பு கிடைப்பதையும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் உறுதி செய்துள்ளது. குழந்தை டம்மிகளையும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட டைனாமிக் சோதனைகளில் ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் 24க்கு முழு 24 மதிப்பெண்களை பெற்றுள்ளது.
அதேபோல், ஹெரியர் இவி எலட்ரிக் காரில் குழந்தைகளுக்கான பிரத்யேகமான இருக்கைகளை பொருத்தும் வசதிக்கும் 12க்கு முழு 12 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் எம்பவர்டு 75 மற்றும் எம்பவர்டு 75 ஆல்-வீல்-டிரைவ் என்கிற இரு வேரியண்ட்கள் சோதனை செய்யப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசல் என்ஜினை கொண்ட டாடா ஹெரியர் கார் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளதினால், ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திரங்களை பெறும் என முன்னரே எதிர்பார்த்தோம். அதுபோலவே, 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications









