காரின் விலையை குறைக்க டாடா எல்லா வழிகளிலும் முயற்சி பண்ணிடுச்சு! புக் செய்யும் முன்ன நல்லா பார்த்துக்கோங்க!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் முதல் முழு-நீள எலக்ட்ரிக் எஸ்யூவி காரை (Electric SUV Car) அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கர்வ் இவி (Curvv EV) என்கிற மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், விரைவில் அதனை காட்டிலும் அளவில் பெரியதான ஹெரியர் இவி (Harrier EV) எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹெரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹெரியர் இவி உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ் 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை வருகிற ஜூன் 3ஆம் தேதி அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், வெள்ளை நிற ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் ஒன்று எந்தவொரு மறைப்பும் இல்லாமல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் காட்சி தந்துள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த ஹெரியர் இவி காரை தொழிற்சாலையில் இருந்து ஷோரூமுக்கு கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்களாக இவை இருக்கலாம். அல்லது, காரில் அனைத்தும் சரியாக உள்ளதா என்பது தொடர்பான சோதனை ஓட்டமாக இது இருக்கலாம்.
காரின் அறிமுகத்திற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், சோதனை ஓட்டமாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவே. ஏனெனில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் தொடர்பான அனைத்து சோதனை ஆய்வுகளையும் இந்நேரம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்து முடித்திருக்கும். அதேநேரம், காரின் அறிமுகத்திற்கே இன்னும் 1 வாரத்திற்கும் மேல் இருக்கும் நிலையில் அதற்குள்ளாக ஷோரூம்களுக்கு வர துவங்கிவிட்டதா? என்கிற கேள்வியும் எழுகிறது.

இந்த படங்களில், வெள்ளை நிறத்திலான புத்தம் புதிய ஹெரியர் இவி காரின் பின்பக்க வலது சக்கரத்திற்கு மேலே சார்ஜிங் பாயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம். சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா எலக்ட்ரிக் கார்களான பஞ்ச் இவி (Punch EV) மற்றும் கர்வ் இவி-இல் சார்ஜிங் பாயிண்ட் காரின் முன்பக்கத்தில் வழங்கப்படுகிறது.
டீசல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் டாடா ஹெரியர் காரில் டீசல் நிரப்பும் பகுதி ஆனது பின்பக்க வலது சக்கரத்திற்கு மேலே வழங்கப்படுகிறது. அதேபோன்று, ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரிலும் சார்ஜ் நிரப்பும் பகுதி பின்பக்கத்தில் வலதுப்புற சக்கரத்திற்கு மேலே வழங்கப்பட்டுள்ளது. நெக்ஸான் இவி (Nexon EV) எலக்ட்ரிக் காரில் பின்பக்கத்தில் இடதுப்புற சக்கரத்திற்கு மேலே சார்ஜிங் பாயிண்ட் வழங்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள படங்களில், ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ள அலாய் சக்கரங்களின் டிசைனை முதல்முறையாக சாலையில் பார்க்க முடிகிறது. டாடா மோட்டார்ஸின் ஜென்-2 ஆக்டி.இவி பிளாட்ஃபாரத்தில் (Gen 2 Acti.EV Platform) உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரில் பின்பக்கத்தில் மல்டி-லிங்க் சஸ்பென்ஷன் வழங்கப்பட உள்ளது.
75kWh பேட்டரி உடன் விற்பனை செய்யப்பட உள்ள ஹெரியர் இவி தான் டாடா நிறுவனம் இதுவரையில் உருவாக்கியதிலேயே விலையுயர்ந்த மற்றும் அதிக ரேஞ்சை வழங்கக்கூடிய எலக்ட்ரிக் காராக விளங்க உள்ளது. இந்த காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 500கிமீ வரையில் செல்லக்கூடியதாக டாடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஞ்ச் இவி, கர்வ் இவி கார்களை போன்று, ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரிலும் சார்ஜிங் பாயிண்ட் முன்பக்கத்தில் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், காரின் பாடி பேனல்களில் பெரியதாக எந்த மாற்றத்தையும் கொண்டுவர வேண்டாம் என டாடா நிறுவனம் விரும்பியுள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.
Source: Tesla Club India/ X


Click it and Unblock the Notifications








