டாடாவின் இந்த எலக்ட்ரிக் காரை எல்லாரும் புக்கிங் செய்து குவிக்க போறாங்க.. விலையை அறிவிப்பது மட்டும்தான் பாக்கி
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். டெல்லியின் துவார்கா பகுதியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் அதன் புதிய ஹெரியர் இவி (Harrier EV) எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ காட்சிப்படுத்தி உள்ளது. இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி ஆனது டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி ஆனது டெல்லியில் உள்ள துவார்கா என்கிற பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் துவங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் எதிர்பார்த்ததை போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கலந்துக் கொண்டு, அதன் ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. மாருதி சுஸுகியின் புதிய இ-விட்டாரா, மஹிந்திராவின் பிஇ 6 மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக டாடா ஹெரியர் இவி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டாடா ஹெரியர் இவி எலக்ட்ரிக் காருக்கும், ஹெரியர் பெட்ரோல்/ டீசல் காருக்கும் தோற்றத்தில் பெரியதாக வித்தியாசமாக இல்லை. டாடா கர்வ் கான்செப்ட்டில் இருந்தும் சில டிசைன் ஹைலைட்களை பெற்று ஹெரியர் இவி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் ஹெரியர் இவி கார் ஆனது மேட் சில்வர் நிறத்தில் காட்சியளிக்கிறது. இத்தகைய சில்வர் நிறத்தை இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸின் ஸ்டீல்த் எடிசன்களிலும் பார்க்க முடியும்.

புதிய ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களுள் புதிய கிரில் மற்றும் காருக்கு முன் & பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள எல்இடி விளக்குகளை சொல்லலாம். வெளிப்பக்கம் மட்டுமின்றி, புதிய ஹெரியர் இவி காரின் உட்புறமும் ஹெரியர் பெட்ரோல்/ டீசல் காரை தான் நினைவூட்டுகிறது. இருப்பினும், காருக்குள் வழங்கப்பட்டுள்ள புதிய யூஸர் இண்டர்ஃபேஸ் (User Interface) ஆனது நம்மை வசீகரிக்கிறது.
புதிய யூஸர் இண்டர்ஃபேஸ் ஆனது இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அடாஸ் (ADAS), கனெட்டிவிட்டி வசதி மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களையும் புதிய ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரில் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, புதிய 'சம்மன் மோட்' ஹெரியர் இவி காரில் வழங்கப்பட்டுள்ளது.

இது, டிரைவரின் உதவியின்றி காரை தானாக இயங்க வைக்கக்கூடியது ஆகும். ஜென்-2 ஆர்ச்சிடெக்சரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஹெரியர் இவி காரில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் ஆனது காரின் முன் & பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலமாக செயல்படக்கூடியது ஆகும். இந்த காரில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் டாடா மோட்டார்ஸுக்கு புதிய ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், ஹெரியர் இவி எலக்ட்ரிக் காரின் விலை அறிவிக்கப்பட்டதால்தான், இந்த புதிய டாடா எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் வெற்றி பெறுமா என்பதை உறுதியாக சொல்ல முடியும்.


Click it and Unblock the Notifications









