வாழ்நாள் வாரண்டின்னு சொல்லுவாங்க! ஆனா இது தெரியாம செகண்ட் ஹேண்ட்ல இந்த காரை வாங்கிடாதீங்க!
டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காருக்கு பேட்டரிக்கான வாழ்நாள் வாரண்டியை வழங்கி வருகிறது. அதுவும் கி.மீ குறித்த கணக்கு இல்லாமல் இந்த வாரண்டியை வழங்குகிறது. ஆனால் இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. முதல் ஹேண்டில் இந்த காரை வாங்குபவர்கள் மட்டுமே இந்த வாரண்டியை அனுபவிக்க முடியும். செக்ண்ட் ஹேண்டில் இந்த வாகனம் மாறிவிட்டால் இந்த வாரண்டி என்பது குறைக்கப்படும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கடந்த 3ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் வரும் ஜூலை 2ம் தேதி துவங்ககிறது. இந்த கார் மொத்தம் 5 விதமான வேரியன்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதன்படி இந்த கார் ரூ21.49 லட்சம் முதல் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான வேரியன்ட் வாரியிலான விலை விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரியின் ஆயுள் தான். வாகனம் வாங்கி சில ஆண்டுகளில் பேட்டரி பழுதாகிவிட்டால் அதிக செலவு வந்துவிடுமே என பலர் பதறுகின்றனர். அந்த பிரச்சனையை சமாளிக்க டாடா நிறுவனம் ஹாரியர் இவி காரை வாங்குபவர்களுக்கு வாழ்நாள் பேட்டரி வாரண்டியை வழங்குகிறது. அதுவும் கி.மீ குறித்த எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இந்த வாரண்டியை வழங்குகிறது.
இந்த வாழ்நாள் பேட்டரி வாரண்டி என்பது வாகனத்தின் ஆயுளுக்கான பேட்டரி வாரண்டியாக இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு இந்த பேட்டரிக்கு வாரண்டியை வழங்குகிறது. வழக்கமாக வழங்கப்படும் பேட்டரி வாரண்டிகளுக்கு ஆயுள் காலத்துடன் சேர்த்து எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தும் பேட்டரிக்கான வாரண்டி மாறுபடும்.

ஆனால் இந்த ஹாரியர் இவி காரில் 15 ஆண்டுகளுக்கு எவ்வளவு கி.மீ ஓடியிருந்தாலும் இந்த வாரண்டி என்பது செல்லுபடியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதில் சூட்சுமம் இருக்கிறது. இந்த வாழ்நாள் பேட்டரி வாரண்டி என்பது இந்த காரை முதலில் வாங்கும் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். முதலில் இந்த காரை வாங்கி பயன்படுத்திவிட்டு செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் இந்த காரை வாங்கினால் அப்பொழுது பேட்ரிக்கான வாரண்டி என்பது மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் செக்ண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனையாகிவிட்டால் இந்த காருக்கு 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கி.மீ என வாரண்டியை மாறிவிடும். அப்படி பார்த்தால் இந்த காரை வாங்கிய ஒருவர் 2 ஆண்டுகள் அதை பயன்படுத்திவிட்டு 50 ,000 கி.மீ ஓடிய பின்பு இதை செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்கிறார் என்றால், அந்த காரை வாங்குபவருக்கு 10 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் கழிக்கப்படும், 2 லட்சம் கி.மீ 50, 000 கி.மீ கழிக்கப்பட்டு மீதம் உள்ள 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ எது முதலில் வருகிறதோ அதற்கு தான் வாரண்டி கிடைக்கும். முதலில் வாங்கியவருக்கு உள்ள வாழ்நாள் வாரண்டி பலனை செகண்ட் ஹேண்டில் வாங்கியவரால் அனுபவிக்க முடியாது.

இந்த வாரண்டி காலத்திற்கு பிறகு பேட்டரி பழுதானால் அதை அவரது சொந்த செலவில் தான் மாற்ற வேண்டும். ஹாரியர் இவி போன்ற எலெக்ட்ரிக் காரில் பேட்டரியை மாற்ற வேண்டும் என்றால் ரூ5 முதல் ரூ10 லட்சம் வரை கூட செலவாகும். டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரில் 65Kwh மற்றம் 75 Kwh ஆகிய இரண்டு விதமான பேட்டரிகளை வழங்குகிறது. இந்த பேட்டரிகள் லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரியாக இருக்கிறது. இது நீடித்த ஆயுளுக்கு பெயர் பெற்ற பேட்டரிகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹாரியர் இவி காரில் டாடா நிறுவனம் வாழ்நாள் பேட்டரியை வழங்கினாலும் அதை முதல் ஹேண்டில் கார் வாங்குபவர்கள் மட்டுமே அனுபவிக்க முடியும் என தெரிவித்திருந்தாலும், செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும் பேட்டரி வாரண்டியும் குறைவாக இல்லை. இதுவும் நல்ல வாரண்டி காலமாக இருப்பதால் மக்கள் மத்தியில் இதற்கு பெரிய வரவேற்பு இருக்கும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









