டாடாவின் அறிவிப்பால் எத்தனை பேருக்கு புதிய தொழில் கிடைக்க போகுதோ!! மத்திய அரசுக்கு தான் எல்லா நன்றியும்!
இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்கள் (Commercial Vehicles) விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகும். அதாவது, டாடா கார்களை போன்று டாடா கமர்ஷியல் வாகனங்களையும் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாங்குகின்றனர். இன்னும் சொல்லப்போனால், கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையில் கோலோச்சிய தைரியத்தில்தான் 1998ஆம் ஆண்டில் பயணிகள் வாகனங்கள் மார்க்கெட்டில் டாடா களம்புகுந்தது.
இவ்வாறு, இந்தியாவின் மிகப்பெரிய கமர்ஷியல் வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜி.எஸ்.டி (GST) வரி குறைப்பின் முழுப் பலனையும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் நடைமுறைக்கு வரும் நாளான வருகிற செப்டம்பர் 22 முதல், அனைத்து டாடா கமர்ஷியல் வாகனங்களுக்கும் இந்தக் குறைக்கப்பட்ட விலைகள் பொருந்தும்.

செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸின் கமர்ஷியல் வாகனங்களில் கொண்டுவரப்படும் விலைக் குறைப்பின்படி, எடைமிக்க டாடா கனரக வாகனங்களின் (HCV) எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.2,80,000 முதல் ரூ.4,65,000 வரை குறைக்கப்பட உள்ளன. அதேநேரம், சற்று எடை குறைவான இடைநிலை டாடா கமர்ஷியல் வாகனங்களின் (ILMCV) விலைகள் ரூ.1,00,000 முதல் ரூ.3,00,000 வரை குறைக்கப்பட உள்ளன.
| வாகனம் | விலையில் கொண்டுவரப்படும் குறைப்பு |
|---|---|
| கனரக வாகனங்கள் | ரூ.2,80,000 - ரூ.4,65,000 வரை |
| நடுத்தர எடை வாகனங்கள் | ரூ.1,00,000 - ரூ.3,00,000 வரை |
| பேருந்துகள் & வேன்கள் | ரூ.1,20,000 - ரூ.4,35,000 வரை |
| எடை குறைவான பயணிகள் கமர்ஷியல் வாகனங்கள் | ரூ.52,000 - ரூ.66,000 வரை |
| எடை குறைவான சரக்கு கமர்ஷியல் வாகனங்கள் & பிக்-அப் டிரக்குகள் | ரூ.30,000 - ரூ.1,10,000 வரை |
டாடா மோட்டார்ஸ் உருவாக்கும் பேருந்துகள் (Buses) மற்றும் வேன்களுக்கு (Vans) ரூ.1,20,000 முதல் ரூ.4,35,000 வரையும், பயணிகளை அழைத்து செல்லும் சிறிய ரக கமர்ஷியல் (SCV) வாகனங்களுக்கு ரூ.52,000 முதல் ரூ.66,000 வரையும், பொருட்களை கொண்டு செல்ல உதவும் சிறிய ரக கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் பிக்-அப் டிரக் (Pick-up Truck) வாகனங்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,10,000 வரையும் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிரிஷ் வாக் இந்த விலை குறைப்பு குறித்துப் பேசுகையில், "வர்த்தக வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 18% ஆகக் குறைத்தது, இந்தியாவின் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் (Logistics) துறையை மீட்டெடுக்கும் ஒரு துணிச்சலான மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்" என்றார்.
மேலும், "மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மாண்புமிகு நிதி அமைச்சரின் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் (Council) அறிவித்த முற்போக்கான சீர்திருத்தங்களால் உத்வேகம் பெற்று, எங்கள் அனைத்து கமர்ஷியல் வாகனங்களுக்கும் ஜி.எஸ்.டி குறைப்பின் முழுப் பலனையும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் டாடா மோட்டார்ஸ் பெருமை கொள்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய கிரிஷ் வாக், "நம்பிக்கைக்குரிய நீண்ட கால பாரம்பரியம் மற்றும் நவீன வாகனங்கள் & போக்குவரத்து சொல்யூஷன்கள் அடங்கிய விரிவான போர்ட்ஃபோலியோ உடன் இந்தியாவை முன்னேற்றும் வணிகங்களுக்கும், போக்குவரத்தை எளிதாக்குவதற்கும், வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் நாங்கள் தொடர்ந்து பங்களிப்போம்" என்றும் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கமர்ஷியல் வாகனங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் உயிர்நாடிகளாகும். அவை, நாட்டின் ஏற்றுமதி & இறக்குமதிகளை வலுப்படுத்தி, வர்த்தகத்தை எளிதாக்கி, நாடு முழுவதும் உள்ள சமூகங்களை இணைக்கின்றன. ஆதலால், டாடா மோட்டார்ஸ் தங்கள் வர்த்தக வாகனங்களின் விலைகளைக் குறைப்பதன் மூலம், போக்குவரத்து நிறுவனங்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான மொத்த உரிமச் செலவு வெகுவாக குறையும்.

இது மேம்பட்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளுக்கான அணுகலை அதிகரித்து, விரைவான வாகன நவீனமயமாக்கலை ஊக்குவிக்கும். இதன் மூலம் போக்குவரத்துத் துறையினர் செலவுகளைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, லாபத்தை அதிகரிக்க முடியும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான வாகனங்களை பண்டிகைக் காலத்தில் டெலிவரி (Delivery) பெற அவற்றை முன்கூட்டியே முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இதுகுறித்த இன்னும் விரிவான தகவல்களுக்கு, அருகிலுள்ள டாடா மோட்டார்ஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமைத் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட டாடா கமர்ஷியல் வாகனத்தின் சரியான விலையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








