மார்ச் 31க்கு பிறகு தலையில் இடியை இறக்க போகும் டாடா! புது வாகனத்தை இப்பவே புக் செய்வது புத்திச்சாலித்தனம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் மிக பெரும் கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனம் (Commercial Vehicle Manufacturer). தற்சமயம் கார்கள் விற்பனையில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்கள் விற்பனையில் ஈடுப்படுவதற்கு முன்பே கனரக லாரிகள் (Lorries), பேருந்துகள் (Buses) உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வந்தது. அதன்மூலம், மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு கொடுத்த தைரியத்தில்தான் 1990ஆம் காலக்கட்டத்தில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் இறங்கிய விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
இந்த அளவிற்கு இந்தியாவின் முன்னணி கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் விரைவில் ஒரு அதிரடியான நடவடிக்கையில் இறங்க உள்ளது. அதுதான், கமர்ஷியல் வாகனங்களின் விலைகளை அதிகரிப்பது ஆகும். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொண்டுவரப்பட உள்ள இந்த விலை அதிகரிப்பை டாடா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மற்ற தனியார் நிறுவனங்களை போல், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது தயாரிப்புகளின் விலைகளை அதிகரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. புதிய ஆண்டின் துவக்கத்திலும், பின்னர் 6- 7 மாதங்கள் கழித்து ஒருமுறையும் என ஒரே ஆண்டில் 2- 3 முறை வாகனங்களின் விலைகளை அதிகரிக்கும் நிறுவனங்கள் கூட உள்ளன.
சில சமயங்களில், ஆண்டின் ஏப்ரல் மாதத்திலும் வாகனங்களின் விலைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உயர்த்துவது உண்டு. ஏனெனில், ஏப்ரல் 1ஆம் தேதியில் புதிய நிதியாண்டு துவங்குவதால், புதிய நிதியாண்டை விலை அதிகரிப்புடன் சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் துவங்குகின்றன. அந்த வகையில், வருகிற ஏப்ரல் மாதத்தை விலை அதிகரிப்புடன் துவங்க உள்ளதாக சமீபத்தில்தான் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளதால், அந்த நிறுவனத்தின் விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மாருதி சுஸுகி காரை வாங்க திட்டமிட்டு வருபவர்களின் தலையில் இடியாய் விழுந்துள்ளது. இந்த நிலையில், கமர்ஷியல் வாகனங்களை வாங்க திட்டமிட்டு வருபவர்களின் தலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்கிற்கு இடியை இறக்கி உள்ளது.
வருகிற 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கமர்ஷியல் வாகனங்களின் விலைகளை 2% வரையில் அதிகரிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. 2% என்பது அதிகப்பட்ச விலை அதிகரிப்பாகும். அதாவது, சில டாடா கமர்ஷியல் வாகனங்களின் 1% அல்லது அதற்கும் குறைவாக அதிகரிக்கப்படலாம். ஆதலால், டாடா மோட்டார்ஸின் இந்த விலை அதிகரிப்பு ஆனது வாகனம் மற்றும் அதன் வேரியண்ட்டை பொறுத்து மாறுப்படும்.

வழக்கம்போல், இந்த விலை அதிகரிப்புக்கும் தொடர்ந்து அதிகரித்து வாகன உற்பத்தி செலவை காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களை விற்பனையில் நம்பர் ஒன் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளதுல். அதாவது, கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகி எவ்வாறு உள்ளதோ அதேபோன்று, கமர்ஷியல் வாகனங்களில் டாடாவின் ஆதிக்கம் உள்ளது.
இதற்கு காரணம், டாடா மோட்டார்ஸில் இருந்து பல்வேறு விதமான கமர்ஷியல் வாகனங்கள் பல்வேறு விதமான பயன்பாடுகளுக்காக விற்பனை செய்யப்படுகின்றன. டாடா சிக்னா (Tata Signa) போன்ற எடைமிக்க கனரக லாரியில் இருந்து டாடா இண்ட்ரா (Tata Intra) போன்ற எடை குறைவான சரக்கு வாகனங்கள் வரையில் டாடா பிராண்டில் இருந்து நிறைய மாடல்களில் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் ஆனது சுமார் 16 ஆயிரத்து 500 கோடி டாலர்கள் மதிப்பிலான பிரம்மாண்டமான நிறுவனம் ஆகும். இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் 4 ஆயிரத்து 400 கோடி டாலர்கள் மதிப்புடையதாக உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டு உள்ள பணம் மதிப்பு எல்லாம் டாலர்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை மறந்துவிட வேண்டாம். அவற்றை இந்திய ரூபாய் மதிப்பிற்கு மாற்றினால், இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
இவ்வளவு பெரிய மற்றும் செல்வாக்கு மிகுந்த நிறுவனமாக இருப்பினும் வாகனங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் டாடா மோட்டார்ஸுக்கு ஏற்பட்டுள்ளது. 2% என்பது உங்களில் சிலருக்கு குறைவானதாக தோன்றலாம். ஆனால், அதனை ரூபாயாக மாற்றி பார்த்தால்தான் அது எவ்வளவு அதிகம் என்பது புரியும். உதாரணத்திற்கு, 20 லட்ச ரூபாய் மதிப்பிலான டாடா கமர்ஷியல் வாகனத்தின் விலை சுமார் ரூ.40,000 அதிகரிக்கப்படும்.


Click it and Unblock the Notifications









