இதை எல்லாம் பார்க்காமல் போயிட்டீர்களே ரத்தன் டாடா! சேல்ஸில் 2வது இடத்தை ஹூண்டாய் கிட்ட இருந்து பறிச்சாச்சு!!
உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் நம் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. நடந்து முடிந்த 2024 டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 3.20 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்தெந்த கார் நிறுவனங்கள் எத்தனை கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன என்பதை டாப்-5 வரிசையாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 14 விதமான கார் நிறுவனங்களில் இருந்து கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவை மொத்தமாக கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 345 கார்களை விற்பனை செய்துள்ளன. ஆனால், 2023ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் இந்த 14 கார் நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்து 87 ஆயிரத்து 204 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஆக, 2023 டிசம்பரை காட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பரில் சுமார் 34 ஆயிரத்து 141 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2024 நவம்பர் மாதத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை விட டிசம்பர் மாதத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
அதாவது, 2024 நவம்பரை காட்டிலும் டிசம்பரில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வழக்கம்போல், கடந்த 2024 டிசம்பர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 115 ஆகும்.

2023 டிசம்பரில் வெறும் 1 லட்சத்து 4 ஆயிரத்து 778 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. ஆனால், 2024 நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 312 கார்களை விற்பனை செய்திருந்தது. மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் பிடிப்பது வழக்கம். ஆனால், கடந்த டிசம்பர் மாத விற்பனையில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் (Tata Motors) 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.
கடந்த மாதத்தில் மொத்தம் 44 ஆயிரத்து 221 டாடா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் இது கடந்த நவம்பர் மாதத்தை காட்டிலும் 2,842 கார்கள் குறைவாகும். 2023 டிசம்பர் மாதத்திலும் இதனை காட்டிலும் 750 டாடா கார்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டது. ஆக மொத்தத்தில் இது வழக்கமாக விற்பனையாகக்கூடிய டாடா கார்களின் எண்ணிக்கை தான். ஹூண்டாய் கார்களின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான ஹூண்டாய் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் வெறும் 42 ஆயிரத்து 208 ஹூண்டாய் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தில் உள்ள மஹிந்திரா (Mahidra) கடந்த மாதத்தில் 41 ஆயிரத்து 424 கார்களை விற்பனை செய்துள்ளது; நல்ல முன்னேற்றம். 5வது இடத்தில் 24 ஆயிரத்து 887 கார்கள் விற்பனை உடன் டொயோட்டா (Toyota) உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டிலும் சில முறை விற்பனையில் முந்தியுள்ளது. கடந்த 2024இன் கடைசி டிசம்பர் மாதத்தில் மீண்டும் அந்த ஆச்சிரியத்தை டாடா செய்துள்ளது. எம்ஜி மோட்டார் (MG Motor) கார்கள் விற்பனையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









