டாடா கார் கம்பெனியை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு! ஒரே வருஷத்தில் என்ன தான் ஆச்சு?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), வாழ்ந்துக் கெட்ட குடும்பம் என்பது போல், கார்கள் விற்பனையில் கடந்த 2024ஆம் ஆண்டு வரையில் வேகமாக வளர்ந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பெரிதும் சரிவை சந்தித்து வருகிறது. வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சிறு முடிவுகள் கூட நமது வாழ்வில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இணங்க, சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் எடுத்த ஒரு சிறிய முடிவு அதன் கார்கள் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அது என்ன என்பதை பின்னர் பார்க்கலாம், முதலில் டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 ஜூன் மாதத்தில் வெறும் 37 ஆயிரத்து 83 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) நிறுவனங்களை காட்டிலும் இது குறைவு என்பதால், இந்தியாவில் கடந்த மாத கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 4வது இடத்திற்கு சரிந்துள்ளது.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 43 ஆயிரத்து 527 கார்கள் விற்பனை உடன் 3வது இடத்தில் டாடா மோட்டார்ஸ் இருந்தது. ஆனால் உண்மையில், 43,527 என்பது கூட வழக்கமாக ஒரு மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கையை விட குறைவாகும். கடந்த ஆண்டு வரையில் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கியது.
சில மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்தை முந்தி 2வது இடத்தை கூட டாடா மோட்டார்ஸ் பிடித்திருந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 37 ஆயிரம் கார்களை மட்டுமே விற்பனை செய்து டாடா நிறுவனம் அதிர்ச்சியளித்து உள்ளது. டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார், நெக்ஸான் (Nexon) ஆகும்.

கடந்த மாதத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 602 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 66 ஆக பதிவாகி இருந்தது. அதாவது, ஏறக்குறைய 450 நெக்ஸான் கார்கள் இந்த ஜூன் மாதத்தில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெக்ஸானின் விற்பனையாவது பரவாயில்லை, இதற்கடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள டாடா பஞ்ச் (Punch) காரின் விற்பனை பெரிய அளவில் சரிவை கண்டு வருகிறது.
2024 ஜூன் மாதத்தில் சுமார் 18 ஆயிரத்து 238 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக விளங்கிய டாடா பஞ்ச், கடந்த ஜூன் மாதத்தில் வெறும் 10 ஆயிரத்து 446 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாடா பஞ்ச் காருக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக 3வது இடத்தில் டியாகோ (Tiago) 6 ஆயிரத்து 32 கார்கள் விற்பனை உடன் உள்ளது.

ஆனால், 2024 ஜூன் மாதத்தில் 5 ஆயிரத்து 174 டியாகோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் டாடா அல்ட்ராஸ் 3 ஆயிரத்து 974 கார்கள் விற்பனை உடனும், 5வது இடத்தில் லேட்டஸ்ட் டாடா காரான கர்வ் 2 ஆயிரத்து 60 கார்கள் விற்பனை உடனும் உள்ளன. இவை இல்லாமல், 1,259 ஹெரியர் கார்கள், 922 சஃபாரி கார்கள் மற்றும் 788 டிகோர் கார்களையும் கடந்த மாதத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
| Tata Cars | June 2025 | June 2024 | YoY Change |
| Nexon | 11,602 | 12,066 | -4% |
| Punch | 10,446 | 18,238 | -43% |
| Tiago | 6,032 | 5,174 | 17% |
| Altroz | 3,974 | 3,937 | 1% |
| Curvv | 2,060 | 0 | - |
| Harrier | 1,259 | 1,347 | -7% |
| Safari | 922 | 1,394 | -34% |
| Tigor | 788 | 1,371 | -43% |
| Total | 37,083 | 43,527 | -15% |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஞ்ச் காரின் சரிவு தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சரிவு ஆகும். இருப்பினும், டாடா மோட்டார்ஸின் சரிவுக்கு மற்றொரு காரணம் இருப்பதாக கூறினோம் அல்லவா... அது என்னவென்றால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த கார் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் (Pratap Bose) வேறொரு நிறுவனத்துக்கு (மஹிந்திரா) மாறியது ஆகும்.
Source: Gaadiwaadi (https://gaadiwaadi.com/)


Click it and Unblock the Notifications









