காரின் வலிமையை இதுக்கு மேல நிரூபிக்க முடியாது! டாடா சியராவை இந்த ஒரு காரணத்துக்காகவே வாங்கலாம்!
இந்திய சந்தையில் டாடா சியரா (Tata Sierra) கார் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 'ஸ்மார்ட்+' எனப்படும் சியரா காரின் அடிப்படை வேரியண்ட்டிற்குரிய விலை ஆகும். சியரா காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16 அன்று தொடங்கவுள்ளன. கார் டெலிவிரிகள் ஜனவரி 15 முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடந்த அறிமுக விழாவில், டாடா மோட்டார்ஸ் புதிய சியரா காரின் சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக விளக்கி கூறியதோடு, கார்-டு-கார் மோதல் சோதனையின் வீடியோவையும் திரையிட்டது. இது நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட மோதல் சோதனையாகும். இதில் இரண்டு சியரா எஸ்யூவி கார்கள் நேருக்கு நேர் மோதவிடப்பட்டன.

இது ஒரு இந்திய காரின் முதல் கார்-டு-கார் மோதல் சோதனை என்பது குறிப்பிடத்தக்கது. இது வழக்கமான அசையா தடைகளுடன் மேற்கொள்ளப்படும் சோதனையை விட யதார்த்தமானது என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்-டு-கார் மோதல் சோதனையை கடைசியாக 2019-ஆம் ஆண்டு குளோபல் NCAP நடத்தியது.
அப்போது ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைக்கான நிசான் என்பி300 (Nissan NP300) என்கிற பிக்-அப் டிரக்குகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் தரத்தை வெளிப்படுத்தினர். அதற்குப் பிறகு, குளோபல் NCAP மற்றும் பாரத் NCAP மூலம் பல கார் மோதல் சோதனைகள் நடத்தப்பட்டாலும், அவை அனைத்தும் அசையா தடைகளுடன் மட்டுமே நடத்தப்பட்டன.

ஆனால், டாடா மோட்டார்ஸ் தற்போது நடத்திய இந்த கார்-டு-கார் மோதல் சோதனையின் முடிவுகளின்படி, பயணிகள் அமரும் கேபின் பாதுகாப்பாக இருந்தது; கதவுகள் மோதலுக்குப் பிறகே திறந்தன; எரிபொருள் டேங்க் சிஸ்டம் மோதல் ஏற்பட்டதும் உடனடியாக அடைத்துக் கொண்டு சீல் வைக்கப்பட்டது. சோதனையின் போது காருக்குள் அமர வைக்கப்பட்டிருந்த டம்மிகளுக்கு சீட் பெல்ட்கள் பாதுகாப்பாக இருந்தன மற்றும் மோதலுக்கு பின் தானாக விடுவிக்கப்பட்டன.
இவை எல்லாவற்றையும் விட சியரா கார்களின் கட்டமைப்பு ஒருமைப்பாடு அப்படியே இருந்தது. இந்த மோதல் சோதனையின் பின்னர், இரண்டு சியரா கார்களிலும் முன்புற பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் A-பில்லர்களை (முன் தூண்கள்) கூட அடையவில்லை. மோதல் பாதுகாப்பிலும், உறுதியான கட்டமைப்பு ஒருமைப்பாட்டிலும் டாடா மோட்டார்ஸ் சிறந்த சாதனைப் பதிவைக் பதிவு செய்துள்ளது.

இதனால், மற்ற டாடா கார்களை போன்று சியராவும் பாரத் NCAP மற்றும் குளோபல் NCAP மோதல் பாதுகாப்பு சோதனைகளில் முழு 5 நட்சத்திர மதிப்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியரா காரின் பாதுகாப்பு அமைப்புகளைப் பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ் இந்த காரில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS) ஆகியவற்றை ஸ்டாண்டர்ட் அம்சமாக சியரா கொண்டுள்ளது.
மேலும், 20க்கும் மேற்பட்ட லெவல்-2 ADAS அம்சங்கள், 360 டிகிரி கேமராக்கள், டிரைவர் சீட்டில் இருந்து பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி போன்ற ஆக்டிவ் பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன. இவற்றை விட, சியராவின் உறுதியான கட்டமைப்பு மற்றும் சிறந்த மோதல் செயல்திறன் நம்மை வசீகரிக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான கார் விபத்துகள் இரண்டு நகரும் வாகனங்களுக்கு இடையேதான் நிகழ்கின்றன. இதை உருவகப்படுத்தும் விதமாக, டாடாவின் சியரா கார்-டு-கார் மோதல் சோதனையில், இரண்டு சியரா கார்கள் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் நேருக்கு நேர் மோதலில் ஈடுபடுத்தப்பட்டன. இந்தியாவில் செயல்படும் ஒரு கார் நிறுவனம் உள்நாட்டில் கார்-டு-கார் மோதல் சோதனையை நடத்தியது இதுவே முதல்முறை.


Click it and Unblock the Notifications









