வேகமா சார்ஜாகும் இ-காரை விற்பனையில் இருந்து வெளியேற்றிய டாடா மோட்டார்ஸ்.. மொத்தமா 6 ஆப்ஷன்களை தூக்கிட்டாங்க!
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், இது அனைத்து மின்சார வாகன மாடல்களுக்கும் பொருந்ததாது. ஒரு சில இ-கார் மாடல்கள் மக்களின் கவனத்தைக் கவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான கார் மாடலாகவே டாடா பஞ்ச் இவி (Tata Punch EV) கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகள் மாறியிருக்கின்றன. இந்தியாவில் கணிசமான அளவு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் மின்சார கார் மாடலாக பஞ்ச் இவி தென்படுகின்றது.
ஆனால், அதன் அனைத்து வேரியண்டுகளும் மக்களைக் கவர்ந்துவிட்டது என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட சில வேரியண்டுகளுக்கு மக்கள் மத்தியில் குறைவான வரவேற்பே கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பஞ்ச் இவியின் ஒரு சில வேரியண்டுகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்காத சூழல் நிலவுகின்றது.

அந்த நிலையில் உள்ள வேரியண்டுகளையே இப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனையில் இருந்து அகற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக ஆறு தேர்வுகளை அது வெளியேற்றி இருக்கின்றது. ஏசிஎஃப்சி (ACFC) வரிசையில் விற்பனைக்குக் கிடைத்த அனைத்து வேரியண்டுகளையும் அது விற்பனையில் இருந்து அகற்றிவிட்டது.
ஏசிஎஃப்சி என்பது ஏசி மின்சாரத்தில் வேகமாக சார்ஜாகும் வசதிக் கொண்டது என்பதாகும். இந்த வசதியை அட்வென்சர் எல்ஆர் ஏசிஎஃப்சி (Adventure LR ACFC), அட்வென்சர் எஸ் எல்ஆர் ஏசிஎஃப்சி (Adventure S LR ACFC), எம்பவர்டு எல்ஆர் ஏசிஎஃப்சி (Empowered LR ACFC) ஆகிய வேரியண்டுகளிலேயே டாடா மோட்டார்ஸ் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுமட்டுமல்ல எம்பவர்டு எஸ் எல்ஆர் ஏசிஎஃப்சி (Empowered S LR ACFC), எம்பவர்டு பிளஸ் எல்ஆர் ஏசிஎஃப்சி (Empowered+ LR ACFC) மற்றும் எம்பவர்டு பிளஸ் எஸ் எல்ஆர் ஏசிஎஃப்சி (Empowered+ S LR ACFC) ஆகிய வேரியண்டுகளிலும் அது வழங்கியது. இந்த வேரியண்டுகளையே அடியோடு விற்பனையில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேற்று உள்ளது.
இந்த அனைத்து வேரியண்டுகளும் 7.2 kW ஃபாஸ்ட் சார்ஜர் வசதியுடன் விற்பனைக்குக் கிடைத்தவை என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த 7.2 kW சார்ஜரை கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் கட்டணத்திலேயே டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் இவி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதைக் கொண்டிருக்கும் லாங் ரேஞ்ச் வெர்ஷன்கள் வெறும் 5 மணி நேரங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீத சார்ஜை எட்டிவிடும். அதேநேரத்தில், ஏசிஎஃப்சி அல்லாத வேரியண்டுகள் இதே சார்ஜிங் அளவை எட்ட 13.5 மணி நேரம் ஆகிவிடும். இப்படி அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன் கொண்ட வேரியண்டுகளையே இப்போது டாடா வெளியேற்றியிருக்கின்றது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் இவி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை மின்சார கார் மாடல் ஆகும். ரூ. 9.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிற காரணத்தினாலேயே கணிசமான அளவில் நல்ல வரவேற்பை இந்த கார் மாடல் பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதிலும் சரியாக வரவேற்பைப் பெற தேர்வுகளையே இப்போது டாடா வெளியேற்றியிருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் பஞ்ச் இவியின் விற்பனையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








