இந்த டாடா காரை வாங்கிட்டா சாலையில் எல்லாரது பார்வையும் உங்க மீதுதான் - காரின் கலரு அப்படி!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி அதன் நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் (Nexon CNG Dark Edition) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டாடா சிஎன்ஜி ஸ்பெஷல் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.70 லட்சத்தில் இருந்து ரூ.14.70 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் கார் நிறுவனங்களுள் டாடா மோட்டார்ஸும் ஒன்றாகும். அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்குபவை சிஎன்ஜி கார்கள் எனப்படுகின்றன. பெட்ரோலை விட சிஎன்ஜி எரிபொருள் குறைந்த விலையில் கிடைப்பதாலும், சிஎன்ஜி அதிக காற்று மாசுவை ஏற்படுத்தாதினாலும் சிஎன்ஜி கார்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் மக்களிடத்திலும் சிஎன்ஜி கார்களை வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்திய மார்க்கெட்டில் சிஎன்ஜி கார்களின் பயன்பாட்டை அதிகரித்ததில் டாடா மோட்டார்ஸின் பங்களிப்பும் முக்கியமானது ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட சிஎன்ஜி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுள், நெக்ஸான் சிஎன்ஜி-யும் ஒன்றாகும்.
இந்த நிலையில்தான், சைலண்டாக நெக்ஸான் சிஎன்ஜி காரில் புதியதாக டார்க் எடிசனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெயருக்கேற்ப இந்த ஸ்பெஷல் எடிசனில் நெக்ஸான் சிஎன்ஜி கார் முழுவதுமாக பளபளக்கும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். காரின் உடல் பாகங்கள் மட்டுமின்றி, அலாய் சக்கரங்களுக்கும் அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், காரின் உட்பகுதியும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், கிரியேட்டீவ்+எஸ், கிரியேட்டீவ்+பிஎஸ் மற்றும் ஃபியர்லெஸ்+பிஎஸ் என்கிற 3 விதமான வேறியண்ட்களில் புதிய நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கிரியேட்டீவ்+எஸ் மற்றும் கிரியேட்டீவ்+பிஎஸ் -இன் விலைகள் வழக்கமான நெக்ஸான் சிஎன்ஜி காரின் விலைகளை காட்டிலும் ரூ.40,000 அதிகமாகும்.
அதுவே, ஃபியர்லெஸ்+பிஎஸ் வேரியண்ட்டின் விலை ஆனது ரூ.20,000 அதிகமாகும். கிரியேட்டீவ் மற்றும் ஃபியர்லெஸ் வேரியண்ட்களில் கிடைக்கும் அனைத்து அம்சங்களும் புதிய நெக்ஸான் சிஎன்ஜி டார்க் எடிசனிலும் கிடைக்கும். அதனை தாண்டி கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல், இயந்திர பாகங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.
நெக்ஸான் சிஎன்ஜி காரில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக இந்த டர்போ என்ஜின் 100 எச்பி மற்றும் 170 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மற்ற டாடா சிஎன்ஜி கார்களான டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி-இல் ஏஎம்டி (AMT) கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆனால், நெக்ஸான் சிஎன்ஜி காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டார்க் எடிசன் கார்களின் மீது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு எப்போதுமே ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் பொதுவாக இவ்வாறான டார்க் எடிசன் கார்களை பண்டிகை காலத்தின்போது தான் டாடா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் தற்போதுதான் எல்லா பண்டிகையும் முடிந்துவிட்டதே. இந்த புதிய டார்க் எடிசன், நெக்ஸான் சிஎன்ஜி காரின் விற்பனையை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








