ஒரே மாதத்தில் 22 ஆயிரம் பேர் இந்த டாடா காரை வாங்கும்போதே தெரியும், இதெல்லாம் நடக்கும்னு!!
டாடா நெக்ஸான் (Tata Nexon) காரில் அடாஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்கள் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நெக்ஸான் காரில் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் ஃபியர்லெஸ்+ (Fearless+) வேரியண்ட்டில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் என்ஜின் உடன் நெக்ஸான் ஃபியர்லெஸ்+ காரை டிசிடி (DCT) என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்குபவர்கள் அடாஸை பெறலாம்.
இந்த ஆப்ஷன்கள் உடன் நெக்ஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.13.53 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நெக்ஸான் இவி (Nexon EV) எலெக்ட்ரிக் காரில் உள்ள அதே அடாஸ் தொகுப்பு தற்போது பெட்ரோல் நெக்ஸான் காரிலும் சேர்க்கப்பட்டு உள்ளது.

அடாஸ் மூலமாக கார் முன்பக்கமாக மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி (FCW), தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB), சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான உதவி (LDW), பாதையில் இருந்து விலகுவதை தடுக்கும் வசதி (LKA), ஹை பீம் அசிஸ்ட் (HBA) மற்றும் டிராஃபிக் சைகைகளை அடையாளம் காணும் வசதி (TSR) போன்ற அதிநவீன வசதிகளை பெறலாம்.
அனைத்து வசதிகளுடன் வரும் ஃபியர்லெஸ்+ வேரியண்ட்டில் டபுள் டிஜிட்டல் திரைகள், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வெண்டிலேஷன் வசதி உடன் கூடிய முன் இருக்கைகள், ஓட்டுநர் இருக்கையில் உயரத்தை சரிசெய்யும் வசதி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் முழு எல்இடி லைட்டிங் தொகுப்பு போன்ற பல சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

நெக்ஸான் ஃபியர்லெஸ்+ காரில் டாடா நிறுவனத்தின் 1.2 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 86 பிஎச்பி இயக்க ஆற்றலையும், 170 என்.எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமின்றி, இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது.
அடாஸ் ஆனது டாடா நெக்ஸான் காரில் ஃபியர்லெஸ்+ வேரியண்ட்டில் மட்டுமின்றி, நெக்ஸானில் புதியதாக ரெட் #டார்க் எடிசன் (Red #Dark Edition) என புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு அதிலிலும் அடாஸ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விலை சற்று அதிகமாக ரூ.13.81 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அடாஸ் தொழில்நுட்பம் தற்போது சிறிய கார்களிலும் பரவி வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV3XO), கியா சைரோஸ் (Kia Syros) மற்றும் விரைவில் வரவிருக்கும் ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) கார்களில் லெவல் 2 அடாஸ் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இதில் ஹூண்டாய் வென்யூ வருகிற நவம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, இது நெக்ஸானின் முக்கிய போட்டியாளராகும்.
இந்த வெளியீடு குறித்து டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா கருத்துத் தெரிவிக்கையில், "2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நெக்ஸான் அதன் துணிச்சலான வடிவமைப்பு, அற்புதமான செயல்திறன் மற்றும் சமரசமற்ற பாதுகாப்பு அம்சங்களால் எஸ்யூவி பிரிவில் ஒரு புதிய வரையறையை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு புரட்சிக்கு முன்னோடியாக இருந்த முதல் கார் என்ற பெருமையுடன், நெக்ஸான் வாகன பாதுகாப்பில் புதிய தரநிலைகளை அமைத்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலேயே அதிக பேரால் வாங்கப்பட்ட காராக டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்தது. இதனை கொண்டாடும் விதமாகவும், இந்த விற்பனை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் விதமாகவும் நெக்ஸானில் அடாஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சரியான முடிவாகும்.


Click it and Unblock the Notifications









