ஹூண்டாய்க்கு தலைவலி கொடுக்கனும்னே டாடா இந்த காரை கொண்டுவந்து இருக்கு! மக்கள் எதை வாங்குறாங்கனு பார்ப்போம்
டாடா கர்வ் இவி (Tata Curvv EV), இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து இந்த எலக்ட்ரிக் கார் கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக, இந்த காரில் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.22.24 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் (Ex-Showroom) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கர்வ் இவி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
முழுவதும் கருப்பு நிறத்திலான கார்கள் எப்போதுமே பார்ப்பதற்கு அழகானவை மற்றும் வித்தியாசமானவை. காரின் சக்கரங்கள், கண்ணாடிகள் மற்றும் உடற்பகுதி என எல்லாமே கருப்பு நிறத்தில் இருக்கும்போது, கார் பார்க்கவே பிரம்மிப்பானதாக இருக்கும். இத்தகைய கார்களை 'பிளாக் எடிசன்' (Black Edition) அல்லது 'டார்க் எடிசன்' (Dark Edition) என அழைக்கின்றனர்.

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் தனது கார்களில் டார்க் எடிசன்களை அறிமுகம் செய்வது வாடிக்கையான ஒன்றாகும். கடந்த ஆண்டுகளில் பலமுறை டாடா கார்களில் டார்க் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் தற்போது கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் டார்க் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் விலைமிக்கதாக புதிய கர்வ் இவி டார்க் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கர்வ் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் இருக்கும் நிலையில், புதிய கர்வ் இவி டார்க் எடிசன் ரூ.22.24 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காருக்கு அடுத்து டார்க் எடிசனை பெற்றுள்ள 2வது டாடா எலக்ட்ரிக் கார், கர்வ் இவி ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் எம்பவர்டு+ (Empowered+) வேரியண்ட்டின் அடிப்படையில் புதிய கர்வ் இவி டார்க் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, கர்வ் இவி காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்டான எம்பவர்டு+ வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் புதிய டார்க் எடிசனிலும் காணலாம்.
இந்த வகையில், 55kWh திறன் கொண்ட பேட்டரி பேக் புதிய கர்வ் இவி டார்க் எடிசனில் வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், கர்வ் இவி டார்க் எடிசன் முற்றிலும் கருப்பு நிறத்திலானதாக உள்ளது. முன்பக்க ஹெட்லைட் & டி.ஆர்.எல்-கள் மற்றும் 18-இன்ச் அலாய் சக்கரங்களின் ரிம்களில் உள்ள பளிச்சிடும் வெள்ளை நிறத்தை தவிர்த்து, கார் முழுவதும் கருப்பு நிறம் தான்.
குறிப்பாக, காரின் முன்பகுதியில் பம்பர், கிரில், டாடா லோகோ என எல்லாமே கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான டார்க் எடிசன் கார்களில் குறைந்தப்பட்சம் காரின் முன்பக்க பம்பரின் அடிப்பகுதி சில்வர் நிறத்தில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த கர்வ் இவி டார்க் எடிசனில் எல்லாமே கருப்பு நிறத்தில் உள்ளது.

காரின் வெளிப்புறத்தை போலவே உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் மூடப்பட்டுள்ளது. டேஸ்போர்டு, கதவுகளின் உட்புறங்களில் பச்சை மற்றும் வெள்ளை நிற கோடுகள் செல்வதை காண முடிகிறது. இருக்கைகளின் தலையணைகளில் 'DARK' என பொறிக்கப்பட்டுள்ளது. கர்வ் இவி எலக்ட்ரிக் காரில் இதுவரையில் வழங்கப்படாத புதிய சன்ஷேட் (Sunshade) இந்த டார்க் எடிசனில் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முழுவதும் கருப்பு நிறத்திலான கார்களுக்கு இந்தியாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. ஆனால், இவ்வாறான டார்க் எடிசன் அல்லது பிளாக் எடிசன் கார்களை நீண்ட காலத்திற்கு விற்பனை செய்ய முடிவதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் கண்டுக்கொள்வது இல்லாமல் போவதால், கர்வ் இவி காரில் கூட டார்க் எடிசனை குறிப்பிட்ட மாதங்கள் வரையில் மட்டுமே டாடா நிறுவனம் விற்பனை செய்யும். டாடா கர்வ் இவி காருக்கு விற்பனையில் போட்டியாக ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் கார் உள்ளது.


Click it and Unblock the Notifications









