ரூ.25 லட்சத்தில் எல்லாம் கூடவா டாடா கார் விற்பனையாகுது? சாலையில் எளிதில் காண முடியாத கார்கள்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம். டாடாவில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களாக ஹெரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari)-ஐ சொல்லலாம். இந்த இரு டாடா கார்களில் புதியதாக ஸ்டீல்த் எடிசன்கள் (Stealth Editions) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி க்ளோபல் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் இரு விதமான ஸ்பெஷல் எடிசன்களை பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தியது. ஸ்டீல்த் மற்றும் பந்திப்பூர் எடிசன்கள் என்பன அவை ஆகும்.

இதில், ஹெரியர் & சஃபாரி கார்களின் ஸ்டீல்த் எடிசன்கள் முதலாவதாக தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பந்திப்பூர் எடிசன்கள் இன்னும் சில மாதங்கள் கழித்து அறிமுகம் செய்யப்படலாம். டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் ஸ்டீல்த் எடிசன்கள் முறையே ரூ.24.85 லட்சம் மற்றும் ரூ.25.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமான ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களுடன் ஒப்பிடுகையில் இவற்றின் விலைகள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப இவற்றில் நிறைய காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பந்திப்பூர் எடிசன்களின் விலைகளும் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் வழக்கமான விலைகளை காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஹெரியரின் டாப் வேரியண்ட்டான ஃபியர்லெஸ்+ மற்றும் சஃபாரி காரின் டாப் வேரியண்ட்டான அக்கம்ளீஷ்டு+ வேரியண்ட்களின் அடிப்படையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், ஹெரியர் & சஃபாரி கார்களின் டாப் வேரியண்ட்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் புதிய ஸ்டீல்த் எடிசனிலும் பெறலாம்.
மேலும், டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் ஸ்டீல்த் எடிசன்களை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் பெறலாம். பெயருக்கேற்ப புதிய ஸ்டீல்த் எடிசன்கள் மேட் ஸ்டீல்த் கருப்பு நிற பெயிண்ட்டில் உள்ளன. காரின் 19-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் கூட மேட் கருப்பு நிற ஃபினிஷிங்கில் உள்ளன.

வெளிப்பக்கத்திற்கு ஏற்ப இந்த ஸ்டீல்த் எடிசன் கார்களின் உட்புறமும் கார்பன் கருப்பு நிறத்தில் உள்ளது. இருக்கைகள் கிரானைட் கருப்பு நிற தையல்கள் உடனும், டேஸ்போர்டு மென்மையான மெட்டீரியல்களால் ஆனவை ஆகவும் விளங்குகின்றன. ஹெரியர் மற்றும் சஃபாரி டாப் வேரியண்ட்களில் ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், குரல் மூலமாக செயல்படும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி போன்ற விலையுயர்ந்த கார்கள் முற்றிலும் கருப்பு நிறத்தில் மிகவும் அற்புதமாக உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், புதிய ஸ்டீல்த் எடிசன்கள் இந்த டாடா கார்களின் விலைகளை அதிகரிக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். விரைவில் பந்திப்பூர் எடிசன்களும் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளதால் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








