மிடில்-கிளாஸ் மக்கள் கார் வாங்க கூடாதுனு நெனைக்குறாங்களா என்ன... டாடா காரில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களுள் ஒன்று, டியாகோ (Tiago) ஆகும். டாடா மோட்டார்ஸின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காராக டியாகோ விளங்குகிறது. இதனாலேயே இந்த காரில் புது, புது மாடல்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக டியாகோ என்.ஆர்.ஜி (NRG) கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கிராஸ்-ஹேட்ச்பேக் (Cross-Hatchback) என அழைக்கின்றனர். அதாவது, டியாகோ காருக்கும், டியாகோ என்ஆர்ஜி காருக்கும் தோற்றத்தில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
இத்தகைய சிறப்புமிக்க டியாகோ என்ஆர்ஜி காரை புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக புதிய டியாகோ என்ஆர்ஜி காரின் தோற்றத்தில் சிறு சிறு மாற்றங்களும், புதிய வசதிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரம், டியாகோ என்ஆர்ஜி காரின் விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், டியாகோ என்ஆர்ஜி காரின் ஆரம்ப விலை அதிகரித்துள்ளது. 2025 டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.2 லட்சத்தில் இருந்து ரூ.8.75 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. எக்ஸ்.இசட் (XZ) மற்றும் எக்ஸ்.இசட்.ஏ (XZA) என 2 விதமான வேரியண்ட்களில் புதிய டியாகோ என்ஆர்ஜி கார் கிடைக்கும். இவற்றை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் அல்லது சிஎன்ஜி (CNG) ஆப்ஷனில் வாங்கலாம்.
2025 டியாகோ என்ஆர்ஜி எக்ஸ்.இசட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.7.2 லட்சமாகவும், சிஎன்ஜி ஆப்ஷனில் ரூ.8.2 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுப்பக்கம், எக்ஸ்.இசட்.ஏ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.7.75 லட்சமாகவும், சிஎன்ஜி ஆப்ஷனில் ரூ.8.75 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதற்குமுன் வரையில், எக்ஸ்.டி (XT) என்கிற விலை குறைவான வேரியண்ட்டிலும் டியாகோ என்ஆர்ஜி விற்பனை செய்யப்பட்டு வந்தது. மற்றப்படி, புதிய டியாகோ என்ஆர்ஜி காரில் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அதிகப்பட்சமாக 86 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பெட்ரோல் என்ஜினை மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் வாங்கலாம்.
அதேபோல், 73 எச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கக்கூடிய சிஎன்ஜி ஆப்ஷனிலும் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பெறலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், டியாகோ என்ஆர்ஜி காரின் சிறப்பம்சமே அதன் முரட்டுத்தனமான தோற்றம் ஆகும். சாதாரணமான டாடா டியாகோ கார் எளிமையான தோற்றத்தை கொண்டது. அதுவே, டியாகோ என்ஆர்ஜி கார் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் ரக்டான தோற்றத்திலானது ஆகும்.

இதற்கேற்ப, இந்த காரின் பக்கவாட்டில் கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் பாடி பேனல்கள் மற்றும் மேற்கூரையில் கருப்பு நிறத்தில் தடிமனான ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. 2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக, புதிய டியாகோ என்ஆர்ஜி காரின் முன் மற்றும் பின்பக்கத்தில் பம்பர்களுக்கு அடியில் சில்வர் நிறத்தில் புதிய ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்னும் சொல்லப்போனால், முன் & பின் பம்பர்களின் டிசைன் கூட சற்று மாற்றப்பட்டுள்ளது. 15-இன்ச் சக்கரங்களுக்கான கவர்கள் முன்பை காட்டிலும் சற்று வேறுப்பட்ட டிசைனில் உள்ளன. புதிய டியாகோ என்ஆர்ஜி காருக்கு உள்ளே 10.25-இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்க்ரீன், ரியர்வியூ கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் & வைபர்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான டாடா டியாகோ காரின் விலைகளை காட்டிலும், புதிய டியாகோ என்ஆர்ஜி காரின் விலைகள் ஏறக்குறைய ரூ.30,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டியாகோ என்ஆர்ஜி காருக்கு நேரடியாக போட்டி மாடல்கள் எதுவும் மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. டியாகோவிற்கு போட்டியாக உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்கள் உடன் வேண்டுமாயின் டியாகோ என்ஆர்ஜி காரை ஒப்பிட்டு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









