5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு கஸ்டமர்ஸ் குறைஞ்சிக்கிட்டே வராங்க! டாடாவின் நிலைமை இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, கடந்த 10 வருடங்களில் நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) உள்ளிட்ட கார்கள் மூலமாக கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக டாடா மோட்டார்ஸின் விற்பனை வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இது கடந்த 2025 மே மாதத்திலும் தொடர்ந்துள்ளது. ஏனெனில், கடந்த மே மாத விற்பனையில் தனது வழக்கமான 3வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் சரிந்துள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் வழக்கமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தை பிடிக்க 2வது இடத்தை ஹூண்டாய் (Hyundai) பிடிப்பது வழக்கம். மிகவும் அரிதாக சில மாதங்களில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தை பிடிப்பது உண்டு. ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களை முந்திக் கொண்டு மஹிந்திரா (Mahindra) 2வது இடத்தை தனதாக்கி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் மஹிந்திரா 2வது இடத்தை பிடிக்க, 3வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்தது. ஆனால், கடந்த மே மாத விற்பனையில் ஹூண்டாய் 3வது இடத்தை பிடிக்க, 4வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2025 மே மாதத்தில் டாடாவில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 557 ஆகும்.
அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் 46 ஆயிரத்து 700 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, டாடா கார்கள் விற்பனை ஆனது 5 ஆயிரத்து 143 யூனிட்கள் குறைந்துள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்திலும் 45 ஆயிரத்து 199 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், ஏப்ரலை காட்டிலும் மே மாதத்தில் 3 ஆயிரத்து 642 டாடா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கார்கள் விற்பனை இந்த அளவிற்கு குறைந்திருப்பினும், டாடா நிறுவனத்திற்கு ஒரே ஆறுதலான விஷயம் என்னவென்றால், டாடா மோட்டார்ஸின் நம்பிக்கைக்குரிய பஞ்ச் காரின் விற்பனை கடந்த ஏப்ரலை காட்டிலும் மே மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்து 496 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் 13 ஆயிரத்து 133 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், 637 பஞ்ச் கார்கள் மே மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த 2024ஆம் ஆண்டின் மே மாதத்தில் 18 ஆயிரத்து 949 பஞ்ச் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

பஞ்ச் காருக்கு அடுத்து இந்த வரிசையில் 2வது இடத்தில் நெக்ஸான் 13 ஆயிரத்து 96 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2024 மே மாதத்தில் 11 ஆயிரத்து 457 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்றாலும், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 15 ஆயிரத்து 457 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வரிசையில் 3வது மற்றும் 4வது இடங்களில் டாடா டியாகோ மற்றும் கர்வ் கார்கள் முறையே 6,407 மற்றும் 3,063 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இதில், கர்வ் ஆனது கடந்த ஆண்டு இறுதியில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. 5வது இடத்தில் உள்ள அல்ட்ராஸ் கடந்த மாதத்தில் 2,779 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை இல்லாமல், கடந்த மே மாதத்தில் 1,109 சஃபாரி கார்கள், 1,076 டிகோர் கார்கள் மற்றும் 894 ஹெரியர் கார்களையும் டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையில் இல்லாத கர்வ் கார் இந்த ஆண்டு மே மாதத்தில் விற்பனையில் உள்ள போதிலும், டாடா மோட்டார்ஸின் மொத்த விற்பனை எண்ணிக்கை பெரிதும் சரிந்துள்ளது. இந்த திடீர் சரிவுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதனை சரிச்செய்ய டாடா நிறுவனம் முயற்சித்தால் மட்டுமே வரும் மாதங்களில் டாடா கார்கள் விற்பனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications
