விதை அவுரு போட்டது! இத பாக்க ரத்தன் டாடா இல்லாம போயிட்டாரே! மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட்ட டாடா மோட்டார்ஸ்
இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது? என்று கேட்டால், பச்சை குழந்தை கூட, சற்றும் யோசிக்காமல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) என சரியாக கூறி விடும். ஆக ஒவ்வொரு மாதமும், டாப் 10 கார் நிறுவனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகியின் முதல் இடத்திற்கே போட்டியே இல்லை.
ஆனால் 2வது இடத்திற்கு 3 நிறுவனங்கள் மோதி கொண்டுள்ளன. அவை டாடா (Tata), மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகியவை ஆகும். நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த பந்தயத்தில், டாடா வெற்றி பெற்றுள்ளது. ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 2வது இடத்தை டாடா பிடித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 60,907 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதான் டாடா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கார்களை டாடா விற்பனை செய்தது கிடையாது.
இதன் மூலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த சாதனைக்கு முக்கியமான காரணமாக இருந்தது டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகும். நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 22,500 டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுதான் டாடா நெக்ஸான் காரின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை ஆகும். இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டது கிடையாது. இன்னும் சொல்லப்போனால், டாடா நிறுவனத்தின் எந்தவொரு காரும், ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் விற்பனையானது இல்லை.
நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை வழக்கம் போல மாருதி சுஸுகி தட்டி சென்றுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,89,665 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் டாடா நிறுவனம் 60,907 கார்களுடன், 2வது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் 56,233 கார்களுடன் மஹிந்திரா நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. 51,547 கார்களுடன் ஹூண்டாய் நிறுவனம் 4வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. வரும் மாதங்களில், 2வது இடத்திற்கு, இந்த 3 நிறுவனங்கள் இடையே இன்னும் மிக கடுமையான போட்டி ஏற்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.
ஏனெனில் கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி (GST) வரி குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் களை கட்ட தொடங்கியுள்ளது. இந்த 2 காரணங்களால், அனைத்து கார் நிறுவனங்களின் ஷோரூம்களிலும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
எனவே வரும் மாதங்களில் டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய 3 நிறுவனங்களுமே மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மற்ற 2 நிறுவனங்களை வீழ்த்தி, ஒவ்வொரு மாதமும் 2வது இடத்தை பிடிக்க போகும் நிறுவனம் எது? என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் புதிய கார்களை வாங்க சரியான தருணம் இது என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் பண்டிகை கால தள்ளுபடி போன்ற சலுகைகள் என இரண்டையும் தற்போது உங்களால் ஒரே நேரத்தில் பெற முடியும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, புதிய கார்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே வரும் மாதங்களில் கார் விற்பனை, புதிய உச்சங்களை எட்டுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








