எலக்ட்ரிக் கார்களை கூட விற்க முடியாமல் திண்டாடும் டாடா... நிலைமை இப்படி மாறும்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம் என தாராளமாக சொல்லலாம். வெளிநாடுகளில் பெரியதாக மார்க்கெட் இல்லாவிடினும், உள்நாட்டில் கார்கள் விற்பனையில் நன்கு வலுவாகவே காலூன்றி நிற்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக டாடா கார்கள் விற்பனை ஆனது பெரியதாக முன்னேற்றம் இல்லாமல் கிணற்றில் போடப்பட்ட கல் போன்று ஒரே இடத்தில் நிற்கிறது. அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனம் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
கடந்த 10 வருடங்களில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் அடைந்திருக்கும் உயரம் பெரியது என்றுதான் சொல்ல வேண்டும். நெக்ஸான், பஞ்ச் என தொடர்ச்சியாக ஹிட் ஆகக்கூடிய கார்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை ஸ்தம்பிக்க வைத்தது. கடந்த 2024ஆம் ஆண்டில் கூட இந்த வரிசையில் கர்வ் என்கிற புதிய காரை அறிமுகம் செய்தது.

இதனால், டாடா மோட்டார்ஸின் கார்கள் விற்பனை மேலும் மேலும் வளர்ந்துக் கொண்டே போகும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சமீப மாதங்களாக டாடா கார்கள் விற்பனை ஆனது பெரியதாக முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. அதேநேரம், டாடா கார்கள் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சொல்ல முடியாது.
கடந்த 2024ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் தனதாக்கியது. ஆனால், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாத விற்பனையில் 4வது இடத்திற்கு டாடா மோட்டார்ஸ் தள்ளப்பட்டுள்ளது. இத்தனைக்கும், 2024 டிசம்பரை காட்டிலும் கடந்த ஜனவரியில் அதிக எண்ணிக்கையிலான கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 316 ஆகும். 2024ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 44 ஆயிரத்து 221 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 53 ஆயிரத்து 633 கார்களை டாடா விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் டாடா கார்கள் விற்பனை ஆனது 10.36%, அதாவது 5,557 கார்கள் குறைந்துள்ளது. டாடா கார்களின் விற்பனை குறைவுக்கு இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இன் விற்பனை குறைந்திருப்பதை முக்கிய காரணமாக சொல்லலாம்.

ஏனெனில், 2024 ஜனவரியில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2025 ஜனவரியில் 5 ஆயிரத்து 240 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்துள்ளது. அதேபோல், 2024 ஜனவரியில் 400 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு டாடா நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் 240 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெரியதாக வெளிநாட்டு ஏற்றுமதியை சார்ந்திருக்கவில்லை என்றாலும், உள்நாட்டு விற்பனை ஆனது 2024 ஜனவரியை காட்டிலும் 5 ஆயிரத்து 500 கார்களுக்கும் மேல் குறைந்திருப்பது நிச்சயமாக சற்று கவலையை ஏற்படுத்தும். திடீரென எலக்ட்ரிக் கார்கள் விற்பனை சரிவதற்கு டாடா நிறுவனம் உடனடியாக ஒரு தீர்வை கண்டுப்பிடித்தாக வேண்டும்.


Click it and Unblock the Notifications









