23கிமீ மைலேஜ் தரும் காரை மெருக்கேற்றும் டாடா! இனிமே தான் ஆட்டம் சூடுப்பிடிக்க போகுது!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று டியாகோ (Tiago) ஆகும். டாடாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான டியாகோ விரைவில் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட உள்ளது. அதாவது, காரின் தோற்றம் மெருக்கேற்றப்படுவதுடன், புதிய தொழிற்நுட்ப அம்சங்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய டியாகோ கார் தொடர்பான டீசர் (Teaser) படத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்று, டாடா டியாகோ ஆகும். இதன் காரணமாகவே இந்த டாடா காரை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலானோர் வாங்குகின்றனர். மேலும், இதனாலேயே டியாகோவை எலக்ட்ரிக் வெர்சனிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இருப்பினும், காரின் விற்பனையை தொடர்ந்து அதிகமாகவே வைத்திருக்க வேண்டுமென்றால், காரை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும் அல்லவா. அதன்படி, புதிய டியாகோ கார் தயாராகி வருகிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், மேம்படுத்தப்பட்ட புதிய டியாகோ கார் வருகிற ஜனவரி 17ஆம் தேதி துவங்கவுள்ள 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-இல் காட்சிக்கு நிறுத்தப்படலாம்.
அப்போதே காரின் விலைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில்தான் தற்போது புதிய டியாகோ கார் தொடர்பான டீசர் படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், காரின் தோற்றத்தை பார்க்கையில், தற்போது விற்பனையில் இருக்கும் டியாகோ போன்றே உள்ளது. சக்கரங்கள் மற்றும் மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னாவின் டிசைனிலும் மாற்றம் இருப்பது தெரியவில்லை.
இந்த டீசர் படத்தில், புதிய டியாகோ கார் இருளில் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளதால், காரின் தோற்றத்தில் புதியதாக என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய முடியவில்லை. நிச்சயமாக புதிய டியாகோ காரின் முன்பக்கத்தை முற்றிலும் புதுமையானதாக எதிர்பார்க்கலாம். அதேபோல், காரின் பின்பக்கத்திலும் சில டிசைன் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம்.
அதுமட்டுமில்லாமல், புதிய டியாகோ காரில் சில புதிய கலர் ஆப்ஷன்களும் அறிமுகம் செய்யப்படும். காருக்கு உள்ளே புதிய டச் ஸ்க்ரீன் சிஸ்டம் மற்றும் கனெக்டட் கார் தொழிற்நுட்பம் போன்ற அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களுடன் பயண சவுகரியத்திற்காகவும் சில அம்சங்கள் புதியதாக வழங்கப்படலாம். டியாகோவின் சன்ரூஃப் (Sunroof) வேரியண்ட்களின் எண்ணிக்கையை டாடா நிறுவனம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
காருக்கு வெளியே போல், காரின் கேபினுக்கும் சில புதிய கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். மற்றப்படி, டியாகோவின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. டியாகோ பெட்ரோல்/ சிஎன்ஜி காருடன் டியாகோ இவி எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐயும் அப்கிரேட் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது. டியாகோ இவி எலக்ட்ரிக் காரிலும் பேட்டரி & மோட்டாரின் திறன்களில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா டியாகோ காருக்கு மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்கள் தான் பலத்த போட்டியாக உள்ளன. இதற்காகவே டியாகோவை அப்கிரேட் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் உள்ளது. அதுமட்டுமின்றி, டியாகோ கார்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக குறைவாகவே பதிவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications








