இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த டாடா! மகளிர் கிரிக்கெட் அணிக்கு இப்படி ஒரு பரிசா!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலக கோப்பையை (ICC Women's World Cup) வென்றது. நவி மும்பையில் (Navi Mumbai) நடைபெற்ற இறுதி போட்டியில், தென் ஆப்ரிக்க (South Africa) மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
பொதுவாக ஒலிம்பிக் மற்றும் ஐசிசி தொடர்கள் போன்ற மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் பட்டங்களை வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கு, பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்படி ஐசிசி மகளிர் உலக கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தற்போது ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு பரிசு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 1991-2003ம் ஆண்டுகளில், டாடா சியரா (Tata Sierra) காரை விற்பனை செய்து வந்தது. சுமார் 22 வருடங்களுக்கு பிறகு, இந்த காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.
வரும் நவம்பர் 25ம் தேதி (November 25), புதிய டாடா சியரா மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த டாடா சியரா காரை, ஐசிசி மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் பரிசாக வழங்கவுள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

டாடா சியரா காரின் டாப் வேரியண்ட், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு பரிசாக வழங்கப்படவுள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் பிரிவில் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான சைலேஷ் சந்திரா கூறுகையில், ''தங்களது சிறப்பான செயல்திறன் மற்றும் வெற்றியின் மூலமாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள், ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்துள்ளனர்.
அந்த ஜாம்பவான்களுக்கு, டாடா சியரா என்ற ஜாம்பவானை வழங்குவதில், நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்'' என்றார். மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த புதிய டாடா சியரா, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்றாகும். இது ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் கிடைக்கவுள்ளது.
ஆனால் ஐசி இன்ஜின் வெர்ஷன்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அதற்கு பின்னர்தான் விற்பனைக்கு வரும். இந்த காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன், இந்திய சந்தையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற கார்களுடன் போட்டியிடவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா கார் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பது, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் அனைவருக்கும் வழங்கவிருப்பது சிறப்பான ஒரு விஷயமாகும்.


Click it and Unblock the Notifications








