டாடா கம்பெனியை காலி பண்ண எங்கிருந்து தான் வராங்கன்னே தெரியல! அவ்வளவு பெரிய கார் எப்படி இந்த விலையில்?
எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா உள்பட உலகம் முழுவதிலுமே தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யக்கூடிய கார் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதாவது, பெட்ரோல், டீசல் கார்களை விற்பனை செய்துவந்த பல கார் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளன. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) முன்னணியில் உள்ளது. ஏனெனில் தற்போதைக்கு டாடா நிறுவனத்தில் இருந்துதான் அதிக எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், கடந்த 2024ஆம் ஆண்டில் டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை முந்தைய 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி பிரபல பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் (MG Motor) உள்ளே நுழைய முயற்சித்து வருகிறது. இதற்கேற்றாற்போல், எம்ஜி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.
எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் இவி (Nexon EV) எலக்ட்ரிக் கார் போட்டியாக உள்ளது. டாடா நெக்ஸான் இவி மற்றும் எம்ஜி விண்ட்சர் இவி இந்த இரு எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
வெளிப்புற தோற்றம்: எம்ஜி விண்ட்சர் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி இவை இரண்டையும் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக நிறுத்தி வைத்து பார்த்தால், இரண்டில் எது தோற்றத்தில் பெரியது என்பதை எளிதாக கண்டுப்பிடித்து விடலாம். ஏனெனில், நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் விண்ட்சர் இவி அளவில் பெரியது ஆகும்.
முக்கியமாக, விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் நீளமானது நெக்ஸான் இவி காரை காட்டிலும் சுமார் 301மிமீ அதிகமாகும். அதாவது, ஒரு 30 செ.மீ அளவுக்கோலுக்கு இணையாக விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் நீளத்தில் பெரியதாக உள்ளது. இதனால், இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் 202மிமீ அதிகமாக உள்ளது.
அதேபோல், அகலம் மற்றும் உயரத்திலும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் சில செமீ-கள் விண்ட்சர் இவி பெரியதாக உள்ளது. எம்ஜி மோட்டாரின் லேட்டஸ்ட் அறிமுகம் விண்ட்சர் இவி என்பதால், அதேற்கேற்ப இந்த காரின் வெளிப்பக்க தோற்றம் ஆனது மிகவும் மாடர்ன் தரத்தில் உள்ளது. இதற்கேற்ப, விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் ஒளிரக்கூடிய எம்ஜி லோகோ வழங்கப்படுகிறது.
டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், இதன் தோற்றம் ஆனது இன்றைய கால மாடர்ன் கார்களின் வழக்கமான டிசைனில் உள்ளது. ஆனால், இந்த காரணத்திற்காகவே நெக்ஸான் இவி காரை நிறைய பேர் வாங்குகின்றனர். விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதை போன்று, நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரிலும் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுகின்றன.

உட்புற தோற்றம்: எம்ஜி விண்ட்சர் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி என இரு எலக்ட்ரிக் கார்களும் உட்புறத்தில் எளிமையான டிசைனில் டேஸ்போர்டை கொண்டுள்ளன. இந்த எளிமையான டேஸ்போர்டு விஷயத்தில் விண்ட்சர் இவி இன்னும் ஒருபடி மேலே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த காரின் டேஸ்போர்டில் பொத்தான்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன.
விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் கேபின் முழுவதும் மென்மையான மெட்டீரியல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த எம்ஜி எலக்ட்ரிக் காரின் டேஸ்போர்டில் மரத்திலான ஃபினிஷிங்கும் கொடுக்கப்படுகிறது. இதனுடன், காரின் இருக்கைகளில் வைர வடிவத்திலான இன்செர்ட்கள் வழங்கப்படுவது விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் உட்புறத்தை இன்னும் காஸ்ட்லீயானதாக காட்டுகிறது. மேலும், இந்த காரின் இருக்கைகளில் கூடுதல் குஷின்கள் சேர்க்கப்படுகின்றன.
இருப்பினும், விண்ட்சர் இவி காரினுள் கதவு கைப்பிடிகள் மிகவும் எடை குறைவானதாக இருப்பதும், டேஸ்போர்டுக்கு கீழே செண்டர் கன்சோல் பகுதி எளிதாக நகர்த்தக்கூடியதாக இருப்பதும் சற்று அசவுகரியமாக உள்ளது. நெக்ஸான் இவி காரின் உட்புற கேபினில் டேஸ்போர்டு ஆனது விண்ட்சர் இவி காரில் உள்ளதை போன்று எளிமையான டிசைனில், கருப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது.
விண்ட்சர் இவி காரை போன்று நெக்ஸான் இவி காரிலும் ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்பக்கத்தில் டிரைவருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை கொடுக்கப்படுகிறது. விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் அளவிற்கு இல்லையென்றாலும், நெக்ஸான் இவி காரின் டேஸ்போர்டில் ஃபாக்ஸ் கார்பன்-ஃபைபர் ஃபினிஷிங் கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த டாடா காரின் டேஸ்போர்டில் ஒளிரக்கூடிய லைட் ஸ்ட்ரிப்கள் வழங்கப்படுகின்றன.
தொழிற்நுட்ப அம்சங்கள்: எம்ஜி விண்ட்சர் இவி காரில் டேஸ்போர்டில் 15.6-இன்ச் தொடுத்திரையும், நெக்ஸான் இவி காரில் சற்று சிறியதாக 12.3-இன்ச் தொடுத்திரையும் வழங்கப்படுகிறது. ஆனால், டிரைவருக்கான தகவல்களை வழங்கக்கூடிய திரை நெக்ஸான் இவி காரில் 10.25-இன்ச்சிலும், விண்ட்சர் இவி காரில் 8.8-இன்ச்சிலும் கொடுக்கப்படுகிறது. விண்ட்சர் இவி காரில் காஸ்ட்லீயான பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப் கொடுக்கப்படுகிறது. அதுவே, நெக்ஸான் இவி காரில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
மின் சாதனங்களுக்கான சார்ஜிங் வசதி: எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரில் 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், ஒரு டைப்-சி & ஒரு டைப்-ஏ சார்ஜிங் பாயிண்ட்கள் வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம், நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரிலும் இதே சார்ஜிங் சாக்கெட்கள் தான் வழங்கப்படுகின்றன என்றாலும், சார்ஜ் ஏறும்போது மொபைல் போனை வைப்பதற்கான இடவசதி நெக்ஸான் இவி காரில் சற்று சிறியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் எம்ஜி விண்ட்சர் இவி மற்றும் டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்களின் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களை மட்டுமே பார்த்துள்ளோம். இவற்றில் பொருத்தப்படும் பேட்டரி & எலக்ட்ரிக் மோட்டார் எவ்வாறு உள்ளது? அவற்றின் மூலமாக காரில் பயண அனுபவம் எவ்வாறு உள்ளது? என்பதை எல்லாம் விவரித்தால், இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுக் கொண்டே போகும். இந்த இரு எலக்ட்ரிக் கார்களில் நீங்கள் எதை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








