ஹூண்டாயின் விலை குறைவான காரை தண்ணி குடிக்க வைத்த டாடா! அவங்க கூடலாம் மோதி ஜெயிக்க முடியுமா!
அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு, இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி (Micro-SUV) ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் கார், டாடா பன்ச் (Tata Punch) காருடன் நேருக்கு நேராக மோதி வருகிறது. ஆனால் கடந்த டிசம்பர் மாத விற்பனையில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வீழ்த்தியுள்ளது டாடா பன்ச். இந்த 2 கார்களின், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,073 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தால் இதே கால கட்டத்தில் வெறும் 5,270 எக்ஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

அதாவது ஹூண்டாய் எக்ஸ்டர் காருடன் ஒப்பிடும்போது, கடந்த டிசம்பர் மாதம் 9,803 டாடா பன்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டர் காரானது, டாடா பன்ச் காரிடம் தோல்வியை சந்தித்துள்ளது மட்டுமல்லாது, விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
ஆம், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7,516 ஹூண்டாய் எக்ஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5,270 ஆக சரிந்துள்ளது. இது 30 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மறுபக்கம் டாடா பன்ச் காரோ விற்பனையில் 9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13,787 ஆக இருந்த டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15,073 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சி ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை 6.20 லட்ச ரூபாய் ஆக உள்ளது. மறுபக்கம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10.50 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
கிட்டத்தட்ட இதே விலையில்தான் டாடா பன்ச் காரும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 6.20 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.32 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.
சரி, டாடா பன்ச் காரின் கை எங்கே ஓங்குகிறது என்றால், அது எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 14.29 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான்.
ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் எலெக்ட்ரிக் வெர்ஷன் கிடையாது. தற்போதைய நிலையில் இல்லை என்றாலும் கூட, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை போல், எதிர்காலத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட்டில் டாடா பன்ச் காரின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதை கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எதிர்காலத்தில் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வந்தால், அது டாடா பன்ச் காருக்கு விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








